இந்தியாவின் ஆரிஹந்த் வகை 4-வது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலான S4 தனது கடல் சோதனைகளை தொடங்கியிருப்பது, நாட்டின் கடல்சார் பாதுகாப்பு திறனை மேலும் ஒருபடி வலுப்படுத்தியுள்ளது. இந்நிலையில், இது இந்தியாவின் அணுசக்தி தடுப்பாற்றலில் ஒரு முக்கிய முன்னேற்றமாகவும் பார்க்கப்படுகிறது. இது குறித்த ஒரு செய்தி தொகுப்பை தற்போது காணலாம்…
இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பு திறன் பல அடுக்குகளைக் கொண்ட ஒரு விரிவான அமைப்பாக வளர்ந்து வருகிறது. இதன் மையமாக இந்திய கடற்படை, கடலோர காவல் படை மற்றும் ஒருங்கிணைந்த கடல்சார் கண்காணிப்பு அமைப்புகள் செயல்படுகின்றன.
குறிப்பாக இந்திய கடற்படை அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள், விமானம் தாங்கிக் கப்பல்கள், நவீன போர் கப்பல்கள், கடற்படை விமானங்கள் மற்றும் ட்ரோன்கள் போன்றவற்றின் மூலம், நீண்ட தூர தாக்குதல், தடுப்பு மற்றும் கண்காணிப்பு திறன்களை பெற்றுள்ளது.
கடலோர காவல் படை கடத்தல், தீவிரவாதம், சட்டவிரோத மீன்பிடி மற்றும் பேரிடர் மேலாண்மை போன்ற அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதில் முக்கிய பங்காற்றுகிறது.
இது தவிர ரேடார் சங்கிலிகள், செயற்கைக்கோள்கள், தானியங்கி அடையாள அமைப்புகள் மற்றும் தகவல் பகிர்வு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
அந்தமான் – நிகோபார் தீவுகள் போன்ற மூலோபாய பகுதிகளில், கூட்டு கட்டுப்பாட்டு அமைப்புகள் இந்தியாவின் கிழக்கு இந்தியப் பெருங்கடல் பாதுகாப்பை வலுப்படுத்துகின்றன. மேலும், “SAGAR” கொள்கை மற்றும் “QUAD” போன்ற சர்வதேச கூட்டணிகள் மூலம் பிராந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பு அதிகரிக்கப்பட்டு, இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்தியா பொறுப்பான கடல்சார் பாதுகாப்பு சக்தியாக தன்னை நிலைநிறுத்தியுள்ளது.
இந்த சூழலில் இந்தியாவின் ஆரிஹந்த் வகையைச் சேர்ந்த 4-வது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலான S4, தனது கடல் சோதனைகளை தொடங்கியுள்ளது நாட்டின் கடல்சார் பாதுகாப்பு திறனை குறிப்பிடத்தக்க அளவுக்கு உயர்த்தியுள்ளது.
இன்னும் அதிகாரப்பூர்வமாக பெயர் சூட்டப்படாத இந்த நீர்மூழ்கிக் கப்பல், கடந்த 2025-ம் ஆண்டு நவம்பர் மாத இறுதியில், விசாகப்பட்டினத்தில் உள்ள கப்பல் கட்டும் தளத்திலிருந்து புறப்பட்டு, பல்வேறு தொழில்நுட்ப மற்றும் செயல்திறன் சோதனைகளில் பங்கேற்று வருகிறது.
சுமார் 7 ஆயிரம் டன் எடையுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த நீர்மூழ்கிக் கப்பல், 3 ஆயிரத்து 500 கிலோ மீட்டரைத் தாண்டி தாக்கும் திறன் கொண்ட எட்டு K-4 அணு ஏவுகணைகளை ஏந்திச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது ஆரிஹந்த் வகையின் கடைசி நீர்மூழ்கி கப்பலாக இருக்கும் எனவும், இதன் பின்னர் இந்தியா அடுத்த தலைமுறை S5 வகை நீர்மூழ்கி கப்பல்களை வடிவமைக்க தொடங்கும் என்றும் பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதில் பயன்படுத்தப்பட்டுள்ள உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பங்களில் பெரும்பாலானவை இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை என்பதால், பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு அடையும் நாட்டின் முயற்சிக்கும் S4 அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் ஒரு முக்கிய எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது.
1984-ம் ஆண்டு தொடங்கப்பட்ட மேம்பட்ட தொழில்நுட்ப கப்பல் திட்டத்தின் ஒரு பகுதியாக ஆரிஹந்த் திட்டம் உருவாக்கப்பட்டது. நிலம், வானம், கடல் என மூன்று தளங்களிலும் அணுசக்தி தடுப்பாற்றலை உறுதி செய்யும் இந்தியாவின் அணுசக்தி முக்கோண அமைப்பில், S4 போன்ற நீர்மூழ்கிக் கப்பல்கள் முக்கிய பங்காற்றுகின்றன.
கடல் சோதனைகள் வெற்றிகரமாக நிறைவடைந்த பின் S4 சேவையில் இணையும்போது, இந்தியாவின் கடல்சார் அணு தடுப்பாற்றல் மேலும் உறுதியடையும் என பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
முதல் கப்பலான INS ஆரிஹந்த் கடந்த 2016-ம் ஆண்டு சேவையில் இணைந்து, 2018-ல் தனது முதல் தடுப்பு ரோந்து பணியை நிறைவு செய்தது.
அதேபோல INS ஆரிகாட் கடந்த 2024-ல் சேவையில் இணைந்து தற்போது செயல்பாட்டில் இருந்து வருகிறது. 3-வது கப்பலான INS அரிதமான் தனது கடல் சோதனைகளை முடித்துவிட்டு, நடப்பாண்டு சேவையில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தற்போது சோதனைகளை தொடங்கியுள்ள S4 வரும் 2027-ம் ஆண்டின் தொடக்கத்தில் அதிகாரபூர்வமாக சேவையில் இணையும் என கணிக்கப்பட்டுள்ளது. INS அரிதமான் மற்றும் S4 ஆகிய இரு கப்பல்களும் நீளமான உடல் அமைப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக இந்த கப்பல்கள் கூடுதல் K-4 ஏவுகணைகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டதாக அமைந்துள்ளன.
ஆரிஹந்த் வகை நீர்மூழ்கி கப்பல்களில் K-4 மற்றும் குறுகிய தூரம் சென்று தாக்கும் K-15 சாகரிகா போன்ற மேம்பட்ட கடல்சார் பாலிஸ்டிக் ஏவுகணைகள் நிரப்பப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் 8 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்ட K-6 ஏவுகணைகளும், இந்த திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டு வருகிறது.
அதேபோல, அடுத்த தலைமுறை S5 வகை அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களின் ஆரம்ப கட்ட கட்டுமான பணிகளும் தொடங்கியுள்ளன. சுமார் 13 ஆயிரத்து 500 டன் எடையுடன் உருவாகும் இந்த கப்பல்கள், 2030-களின் தொடக்கத்தில் சேவையில் சேரும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், S4 கடல் சோதனைகளை தொடங்கியதுடன், பிராந்தியத்தில் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை இயக்கும் முக்கிய நாடுகளில் ஒன்றாக இந்தியா தனது நிலையை உறுதிப்படுத்தியுள்ளதாக துறை சார்ந்த வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
















