இந்தியா, புத்தரின் பாரம்பரியத்தை காப்பது மட்டுமின்றி, அவரது அமைதி மற்றும் கருணை எனும் போதனைகளை உலகிற்கு எடுத்துச் செல்லும் தூதுவனாகவும் செயல்படுகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
புத்தரின் புனித பொருட்கள் மற்றும் விலைமதிப்பற்ற ஆபரணங்களின் மாபெரும் சர்வதேசக் கண்காட்சியை டெல்லியில் உள்ள ராய் பித்தோரா கலாச்சார வளாகத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
“ஒளியும் தாமரையும்: விழிப்புற்றவரின் நினைவுச்சின்னங்கள்” என்ற பெயரில் நடைபெறும் இந்தக் கண்காட்சியில், 1898ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அகழ்வாராய்ச்சியின் போது கண்டெடுக்கப்பட்டு, சுமார் 127 ஆண்டுகளாக வெளிநாட்டில் இருந்த புத்தரின் புனித பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
புத்தரின் புனித எலும்பு எச்சங்கள், படிகப் பேழைகள், தங்க ஆபரணங்கள் மற்றும் விலைமதிப்பற்ற ரத்தினங்களும் இந்தக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இத்தகைய புனிதம் நிறைந்த கண்காட்சியை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, அங்குள்ள அனைத்தையும் பார்வையிட்டார். அதிகாரிகள் அவருக்கு ஒவ்வொன்றாக விளக்கிக் காண்பித்தனர்.
பிறகு நிகழ்ச்சி மேடைக்கு வந்த பிரதமர் மோடி, புத்த பிட்சுகளுக்கு அவர்கள் அணியும் அங்கியை வழங்கி கவுரவித்தார். பின்னர் மேடையில் பேசிய அவர், இந்தியாவின் 125 ஆண்டுகால காத்திருப்புக்குப் பிறகு, நமது புனித சின்னங்கள் நமக்கு கிடைத்துள்ளன எனக் குறிப்பிட்டார்.
மேலும், இனி நாம் புத்தரின் புனித சின்னங்களை தரிசித்து, அவரது ஆசிகளை பெற முடியும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
















