சந்திரயான் – 3 வெற்றிக்கு பின் நடப்பாண்டில் ககன்யான் மனித விண்வெளி திட்டம், புதிய ராக்கெட் ஏவுதல்கள் மற்றும் தனியார் பங்களிப்புடன் இந்திய விண்வெளித் துறையை உலகளவில் புதிய உச்சத்திற்கு கொண்டு செல்ல ISRO தயாராகி வருகிறது. அதுகுறித்த செய்தி தொகுப்பு ஒன்றை தற்போது காணலாம்…
விண்வெளித் துறைக்கான உலகளாவிய போட்டியில் இந்தியா இனி பிற நாடுகளை பின் தொடர்பவராக அல்ல, அவர்களை வழிநடத்துபவராக உருவெடுத்துள்ளது. சந்திரயான் -3 திட்டத்தின் வரலாற்று சாதனைக்கு பின், 2026-ம் ஆண்டில் இஸ்ரோ முன்னெடுத்து வரும் திட்ட பணிகள், அறிவியல் சார்ந்த விண்வெளி கதைகளை நினைவுபடுத்தும் அளவிற்கு விரிவானதாகவும், துணிச்சலானதாகவும் உள்ளன.
சமீபத்தில் இந்தியாவின் பாகுபலி என்றழைக்கப்படும் LVM-3 M-6 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட பின் உரையாற்றிய இஸ்ரோ தலைவர் வி.நாராயணன், இந்தியா பிராந்திய சக்தியிலிருந்து உலகளாவிய விண்வெளி சக்தியாக உருவெடுக்கும் பயணத்தின் விரிவான திட்ட பாதையை வெளியிட்டார்.
குறிப்பாக ககன்யான் மனித விண்வெளி திட்டம் வெற்றியடையும்போது, மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் மிக குறைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா இணையும் என அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவில் இருந்து இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஏவப்படவுள்ள PSLV-C62 ராக்கெட் மூலம், அதிநவீன ஹைப்பர் ஸ்பெக்ட்ரல் படமெடுக்கும் திறன் கொண்ட EOS-N1 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படவுள்ளது. அதனுடன் 18 சிறிய ரக சர்வதேச செயற்கைக்கோள்களும் ஏவப்படவுள்ளன.
EOS-N1 செயற்கைக்கோள் எல்லை பாதுகாப்பு, பேரிடர் மேலாண்மை போன்ற துறைகளுக்கு, வருங்காலத்தில் முக்கிய தரவுகளை வழங்கவுள்ளதாக இஸ்ரோ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முழுக்க முழுக்க இந்திய தொழில்துறை கூட்டமைப்பால் தயாரிக்கப்படும் PSLV-N1 ராக்கெட், விண்வெளி தனியார்மயத்தில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. பிப்ரவரியில் இந்த ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படவுள்ள OCEAN SAT-3A செயற்கைக்கோள், மீன்வளம் முதல் காலநிலை ஆய்வு வரை பல துறைகளுக்கு உதவவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, மார்ச் 2026-ல் நடைபெறவுள்ள ககன்யான் ஜி-1 பயணமும், நாட்டின் விண்வெளித்துறை வளர்ச்சியில் முக்கிய மைல் கல்லாக பார்க்கப்படுகிறது. இந்த பயணத்தில் LVM-3 ராக்கெட் மூலம், “வியோமித்ரா” என்ற பெண் மனித உருவ ரோபோவை இஸ்ரோ விண்வெளிக்கு அனுப்பவுள்ளது.
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் முன் அனைத்து பாதுகாப்பு அமைப்புகளும், சரியாக செயல்படுகிறதா என்பதை சோதிப்பதே இந்த பயணத்தின் பிரதான நோக்கமாக பார்க்கப்படுகிறது.
அதே மாதத்தில் நடைபெறும் TDS-01 பயணத்தில், புதிய மின்சார இயக்க தொழில்நுட்பம் சோதிக்கப்படவுள்ளது. இது செயற்கைக்கோள்களில் பயன்படுத்தும் எரிபொருள் அளவை 90 சதவீதம் வரை குறைக்க உதவும்.
மேலும், சிறிய செயற்கைக்கோள்களுக்கான SSLV-L1 ஏவுதலும், மார்ச் மாதத்திற்கு முன் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த 2022-ல் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்னைகள் இந்த முயற்சிக்கு, முக்கிய அனுபவமாக அமைந்துள்ளதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
நடப்பாண்டின் நடுப்பகுதியில் ஏவப்படவுள்ள GSLV-F17 ராக்கெட்டில், NVS-03 என்ற செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படவுள்ளது. இது நாட்டின் முக்கிய மூலோபாய பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளாக சொல்லப்படுகிறது.
அதேபோல, ஆண்டின் இறுதியில் நடைபெறவுள்ள ககன்யான் ஜி–2 பயணம், 2027-ல் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் முன் செய்யப்படும் கடைசி பாதுகாப்பு சோதனையாக இருக்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
விண்வெளித்துறையில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு அதிகரித்து வரும் நிலையில், 2026 இந்திய விண்வெளித் துறைக்கு புதிய மாற்றங்களின் தொடக்கமாக பார்க்கப்படுகிறது. இவற்றின் மூலம் உலக விண்வெளி சக்திகளுக்கு முன்னோடியாக இந்தியாவை உயர்த்தும் ஆண்டாக இது அமையும் என துறை சார்ந்த வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
















