ஜப்பானை பின்னுக்குத் தள்ளி, உலகின் 4-வது பெரிய பொருளாதார நாடாக முன்னேறியுள்ள இந்தியாவை சீனா பாராட்டியுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
உலகின் 4-வது பெரிய பொருளாதாரமாக இந்தியா முன்னேறியுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது.
மத்திய அரசின் ஆண்டு இறுதிப் பொருளாதார ஆய்வின்படி, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சுமார் 4.18 ட்ரில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது என்றும், 2030-ஆம் ஆண்டுக்குள் இது 7.3 ட்ரில்லியன் அமெரிக்க டாலராக உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் படி, 2028-ஆம் ஆண்டுக்குள்ளேயே ஜெர்மனியைப் பின்னுக்குத் தள்ளி, இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உயரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், வேலையின்மை குறைந்து வரும் நிலையில், பணவீக்கம் குறிப்பிட்ட வரம்புக்கும் கீழே உள்ளது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படி, உலக பொருளாதார அரங்கில் புதிய மைல்கல்லை எட்டியுள்ள இந்தியாவுக்குச் சீனா வாழ்த்து தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, இந்தியாவில் உள்ள சீனத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் யூ ஜிங், தனது எக்ஸ் பக்கத்தில், ஜப்பானை முந்தி உலகின் 4வது பெரிய பொருளாதாரமாக இந்தியா முன்னேறியிருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைவதாக கூறியுள்ளார்.
மேலும், உண்மையான வலிமை என்பது வரலாற்றை நேர்மையாக எதிர்கொண்டு, அதிலிருந்து பாடம் கற்றுக் கொள்வதும், எதிர்காலத்தைப் பொறுப்புணர்வுடன் சந்திப்பதும் ஆகியவற்றிலிருந்து இந்த வளர்ச்சியை இந்தியா பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
முந்தைய நிதியாண்டின் 2வது காலாண்டில் 7.8 சதவீதமாகவும், 2020 நிதியாண்டின் 4வது காலாண்டில் 7.4 சதவீதமாகவும் இருந்த இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, இந்த நிதியாண்டின் 2வது காலாண்டில் 8.2 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. இது கடந்த ஆறு காலாண்டுகளில் இல்லாத அதிகபட்ச வளர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த நவம்பரில் பொறியியல் பொருட்கள், மின்னணுவியல், மருந்துகள் மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் உள்ளிட்ட இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி சுமார் 38.13 பில்லியன் டாலராகும்.
ஏற்றுமதித் துறை வளர்ச்சி, உற்பத்தித் துறை வளர்ச்சி, சேவைத் துறையின் பங்களிப்பு மற்றும் உள்நாட்டு நுகர்வு அதிகரிப்பு ஆகியவையே இந்திய பொருளாதாரத்தை பெரிய பொருளாதாரமாக மாற்றியுள்ளது என்று கூறப் படுகிறது.
குறிப்பாக, தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல் சேவைகள், கட்டுமானம், உள்கட்டமைப்பு வளர்ச்சி மற்றும் ‘மேக் இன் இந்தியா போன்ற திட்டங்கள் பொருளாதார வளர்ச்சிக்கு புதிய வேகத்தை வழங்கியுள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த வளர்ச்சியை, அதிக வளர்ச்சியுடன் குறைந்த பணவீக்கம் என்ற “Goldilocks” தருணம் என்று மத்திய அரசு விவரித்துள்ளது.
2047 ஆம் ஆண்டுக்குள் உயர் நடுத்தர வருமான நிலையை எட்டும் லட்சியத்தை நோக்கி,
சீரான பொருளாதார வளர்ச்சி, நிலையான உள்கட்டமைப்பு சீர்திருத்தங்கள் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய சமூக முன்னேற்றம் என இந்தியா வெற்றிநடை போட்டு வருகிறது.
உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக இருந்த போதிலும், நாடு குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொள்வதாக பொருளாதார வல்லுநர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
குறிப்பாக 2024ம் ஆண்டு, நாட்டின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2,694 அமெரிக்க டாலருக்கும் குறைவாகவே உள்ளது. இது ஜப்பான் மற்றும் ஜெர்மனியை விட மிகக் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
140 கோடி மொத்த மக்கள் தொகையில் அதிகமாக உள்ள இளைஞர்களுக்கு தகுதியுடைய வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதே முக்கிய முன்னுரிமையாக அமைந்துள்ளது.
தொடர்ச்சியான உலகளாவிய வர்த்தக நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில் இந்தியா வேகமாக முன்னேறிவருவது நல்ல அறிகுறியாகும்.
சொல்லப்போனால் “வளர்ந்து வரும் நாடு” என்ற அடையாளத்தைத் தாண்டி, “வழிநடத்தும் சக்தி” என்ற புதிய அடையாளத்தைப் பிரதமர் மோடி தலைமையிலான இந்தியா உருவாக்கியுள்ளது.
















