காவேரிப்பட்டினம் அருகே நிலத்தகராறில் மூதாட்டியை மரத்தில் கட்டி வைத்து டிராக்டர் மூலம் நிலத்தை உழவு செய்ததுடன், பாஜக நிர்வாகியை தாக்கிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேவர்முக்குளம் பகுதியில் உண்ணாமலை என்ற மூதாட்டி கணவர் இறந்த நிலையில், 2 மகன்கள், மருமகள்கள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
மூதாட்டியின் கணவருக்கு சொந்தமான நில வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், உறவினர்கள் இடையே நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில், உண்ணாமலை கணவரின் அண்ணன் மகன் குமார் மற்றும் அவரது மனைவி கல்பனா ஆகியோர் சேர்ந்து மூதாட்டியை மரத்தில் கட்டி வைத்துவிட்டு நிலத்தை டிராக்டர் மூலம் உழுதுள்ளனர்.
தகவலறிந்து வந்த உறவினரான தருமபுரி மாவட்ட பாஜக தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட தலைவர் அண்ணாமலை என்பவரையும் கீழே தள்ளி தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக உண்ணாமலை, அண்ணாமலை ஆகியோர் காவல் நிலையத்தில் வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்துள்ள நிலையில், இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
















