குழந்தைகளை ஆபாசமாக சித்தரிக்கும் படங்கள் உள்ளிட்ட அநாகரிக பதிவுகளை வெளியிட்டு, எலான் மஸ்க்கின் Grok AI மீண்டும் ஒரு சிக்கலில் சிக்கியுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
பள்ளி,கல்லூரி மாணவர்கள் முதல் தகவல் தொழில்நுட்பத் துறை ஊழியர்கள், பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் வரை AI-களையே நம்பியுள்ளனர்.
கடந்த 2023ம் ஆண்டு உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும் டெஸ்லா நிறுவனத்தின் தலைவருமான எலான் மஸ்க், Gemini AI, Chat GPT, OpenAI போன்ற செயற்கை நுண்ணறிவு ChatBot-களுக்குப் போட்டியாக Grok AI யை உருவாக்கினார்.
உலகம் முழுவதும் 60 கோடிக்கும் மேல் எக்ஸ் தளத்தில் இணைந்திருப்பதால், Grok AI குறுகிய காலத்தில் பெரும்பாலானோர் பயன்படுத்தும் ChatBot-யாக உள்ளது.
எக்ஸ் தளத்தில் கேள்வியைப் பதிவிட்டு @Grok என பதிவிட்டால், கேள்விகளுக்கான பதிலை தனித்துவமான கண்ணோட்டத்தில் நொடியில் வழங்குகிறது. பல சிறப்பம்சங்கள் உள்ள Grok AI -ல் ‘Unhinged Mode’ என்ற அம்சம் மிகவும் வெளிப்படையாக கட்டுப்பாடற்றதாக இருக்கும் என்று கூறப்பட்டது.
இந்த அம்சம் அறிமுகப்படுத்திய உடனேயே கேட்கப்படும் கேள்விக்கு வரம்பு மீறியும், கொச்சையாகவும் உண்மைக்கு மாறாகவும் பதிலளித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
அதிகாரப் பூர்வமற்ற பதில்களை Grok AI வெளியிடுவது குறித்து, கேள்வியெழுப்பிய மத்திய அரசு எக்ஸ் நிறுவனத்திடம் Grok AI-யின் உண்மை தன்மையைக் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டது. இதைத்தொடர்ந்து மத்திய அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இந்தப் பிரச்னைகளை முடிவுக்கு கொண்டு வந்தது எக்ஸ் நிறுவனம்.
இரண்டு ஆண்டுகளில் Grok AI செயலி, Grok 4.20 வரை update ஆகியுள்ளது. சிக்கலானத் தரவுகளைக் கையாள்வதிலும் Financial Analysis என்னும் நிதி மேலாண்மை மற்றும் உலகப் பிரச்சனைகளைத் தீர்ப்பதிலும், எதிர்காலத்தைக் கணிப்பதிலும் Grok 4.20 மிகவும் உதவியாக இருக்கிறது என்று கூறப்படுகிறது.
இந்தச் சூழலில், சென்ற வாரம் குழந்தைகளின் ஆபாச படங்களை வெளியிட்டு Grok AI மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது.
பெண் குழந்தைகளை ஆபாசமாக சித்தரித்து Grok AI வெளியிடும் படங்களையும், பதிவுகளையும் தடுத்து நிறுத்த வலியுறுத்தி மாநிலங்களவை உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி உட்பட பலர் கோரிக்கை வைத்துள்ளனர்.
சட்டவிரோதமான மற்றும் தடைசெய்யப்பட்ட குழந்தைளின் ஆபாசப் படங்கள் வெளியானது போன்ற போன்ற பதிவுகளோ. படங்களோ இனி வெளிவராமல் இருப்பதற்காக ,தகுந்த கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துவருவதாக XAI நிறுவனம் தெரிவித்துள்ளது.
எந்த அமைப்பும் 100 சதவீதம் முழுமையான பாதுகாப்பு கொண்டது அல்ல என்றும், மேம்பட்ட சேவைக்கு xAI முன்னுரிமை அளித்து வருவதாகவும், பகிரப்பட்ட விவரங்களை மதிப்பாய்வு செய்து வருவதாகவும் பதிலளித்துள்ள Grok AI, இதுபற்றி மரபு ஊடகங்கள் பொய் சொல்கின்றன என்றும் குற்றம் சாட்டியுள்ளது.
Grok AI வெளியிட்ட அரை குறை ஆடையுடன் இருக்கும் குழந்தைப் படத்தை மீண்டும் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள எலான் மஸ்க், அதன் கீழே சிரித்து அழும் emoji களையும் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், தங்கள் தளங்களில் வெளியிடப்படும் பதிவுகளையும், படங்களையும் கண்காணித்து சமூக ஊடகங்கள் பொறுப்புடன் செயல்படுவது அவசியம் என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே போலியான செய்திகள், ஆபாசப் பதிவுகள் மற்றும் படங்களைத் தடுப்பதற்கும் எக்ஸ் உள்ளிட்ட சமூக ஊடகங்களை ஒழுங்குப் படுத்தவும் கடுமையான சட்டங்களைக் கொண்டுவர நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரை செய்துள்ளது.
குழந்தைகளின் ஆபாச படங்களை AI மூலம் உருவாக்கி பதிவிடுவது AI துறைக்கே இருக்கும் மிகப் பெரிய சவால் என்று AI தொழில் நுட்ப வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
















