கும்மிடிப்பூண்டி அருகே நடந்த பொங்கல் நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய அவைத்தலைவரை, திமுக எம்எல்ஏ தாக்கும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் பகுதியில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட பொறுப்பாளர் மற்றும் திமுக நிர்வாகிகளை அழைக்காமல் திமுக எம்எல்ஏவான டி.ஜெ.கோவிந்தராஜனை மட்டும் அழைத்து நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஒன்றிய செயலாளர் சக்திவேலிடம், திமுக ஒன்றிய அவைத்தலைவர் முனிவேல் முறையிட்டுள்ளார். இனி கட்சி நிர்வாகிகள் அனைவரையும் அழைத்துத் தான் நிகழ்ச்சி நடத்த வேண்டும் என அவர் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளார்.
இந்நிலையில், எல்லாபுரம் பகுதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோலப்போட்டி நடைபெற்றது. இதில் திமுக எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் கலந்து கொண்டார். அப்போது, ஒன்றிய செயலாளரிடம் முறையிட்ட திமுக ஒன்றிய அவைத்தலைவர் முனிவேலை அவர் கன்னத்தில் அறைந்தார். இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
இதனிடையே தனது கன்னத்தில் அறைந்த திமுக எம்எல்ஏ கோவிந்தராஜன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, திமுக ஒன்றிய அவைத்தலைவர் முனிவேல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
















