அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸின் ஓஹியோ வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் ஈடுபட்ட 26 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தத் தாக்குதலின் பின்னணி
ஓஹியோ மாகாணத்தில் சின்சினாட்டி நகரில் வில்லியம் ஹோவர்ட் டாஃப்ட் டிரைவில் உள்ள ஈஸ்ட் வால்நட் ஹில்ஸ் பகுதியில், அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸின் வீடு உள்ளது.
வான்ஸ் மற்றும் அவரது மனைவி உஷா ஆகியோர் சுமார் 12.63 கோடி ரூபாய்க்கு இந்த வீட்டை 2018-ல் வாங்கினார்கள். கடந்த திங்கட்கிழமை, வான்ஸின் வீடு இருக்கும் பகுதியை நோக்கி ஒரு மர்ம நபர் ஓடுவதைக் கண்ட அமெரிக்க ரகசிய சேவை அதிகாரி, காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தார்.
துணை அதிபரின் வீட்டில் ஏதோ உடைக்கும் சத்தம் கேட்டதைத் தொடர்ந்து விரைந்து வந்த காவல்துறையினர் ஒரு மர்ம நபர், சுத்தியலால் வீட்டின் ஜன்னலை உடைத்து வீட்டிற்குள் நுழைய முயன்றதைப் பார்த்துள்ளனர். முன்னதாக வான்ஸ் வீட்டுக்குச் செல்லும் வழியில், ரகசிய சேவை வாகனத்தையும் மர்ம நபர் தாக்கியுள்ளார் என்று தெரியவந்துள்ளது.
தாக்குதல் நடந்த நேரத்தில் வீட்டில் துணை அதிபரின் குடும்பத்தினர் யாரும் இல்லை என்றும் தாக்குதல் நடத்திய மர்ம நபர் வீட்டுக்குள் நுழைய வில்லை என்றும் கூறிய காவல்துறையினர், தாக்குதல் நடத்திய மர்ம நபரைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வான்ஸின் வீட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில், குடியிருப்பில் பல ஜன்னல்கள் உடைக்கப் பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்தத் தாக்குதல்களால் ஒவ்வொரு ஜன்னலிலும் ஏற்பட்டுள்ள சேதத்தின் மதிப்பு சுமார் 25.28 லட்சம் ரூபாயாகும் என்று சின்சினாட்டி அமெரிக்க வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள 26 வயதான (William DeFoor) வில்லியம் டிஃபூர் மீது சொத்துச் சேதம் விளைவித்தல், நாசவேலை, அதிகாரப்பூர்வப் பணியைத் தடுத்தல் மற்றும் அத்துமீறி நுழைதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோடீஸ்வரக் குடும்பத்தில் சின்சினாட்டியில் பிறந்த டிஃபூர், ஒரு திருநங்கையா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இவர் கடந்த மாதம், ஜூலியா என்ற பெயரில் ஒரு முகநூல் பக்கத்தை உருவாக்கியுள்ளார்.
அதில் உள்ள தகவலின் படி, 2018-ல் உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்ற டிஃபூர், சின்சினாட்டி பல்கலைக்கழகத்தின் இசைக் கல்லூரி பாதுகாப்பகத்தில் படித்ததாகவும், படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு, கடந்த ஆண்டு சின்சினாட்டி ஸ்டேட் தொழில்நுட்ப மற்றும் சமூகக் கல்லூரியில் சேர்ந்ததாகவும் தெரியவருகிறது.
ஓஹியோவில் பதிவுசெய்யப்பட்ட வாக்காளராக உள்ள டிஃபூர் எந்தக் கட்சியின் ஆதரவாளர் என்பது தெரியவில்லை. டிஃபூரின் தந்தை வில்லியம் ஒரு பிரபல அறுவை சிகிச்சை நிபுணர் என்றும், தாய் கேத்தரின் ஒரு பிரபல குழந்தை மருத்துவர் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஜனநாயகக் கட்சியின் ஆதரவாளரான டிஃபூரின் தந்தை வில்லியம், கமலா ஹாரிஸின் பிரச்சாரத்துக்கு 11,600 டாலருக்கும் அதிகமாக நன்கொடை அளித்துள்ளதாகவும், 2020-ல் ஜோப்பைடனின் அதிபர் தேர்தல் பிரச்சாரத்திற்கும் அதிக அளவில் நன்கொடை கொடுத்துள்ளதாகவும் கூறப் படுகிறது.
முன்னதாக, 2023-ல் அமெரிக்க சுகாதார மனநல அவசர சேவைகள் மையத்தில் அத்துமீறி நுழைந்த குற்றம்சாட்டில் 10,000 டாலர் பிணையில் டிஃபூர் இருந்தார்.
விசாரணைக்கு ஆஜராகும் அளவுக்கு மனநலத் தகுதி அற்றவர் என்று தீர்மானித்த ஒரு நீதிபதி, டிஃபூர் மீதான குற்றச்சாட்டுகளைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல் கடந்த ஆண்டு, ஹைட் பார்க்கில் உள்ள ஒரு வணிக நிறுவனத்தின் ஜன்னல்கள் உடைக்கப்பட்டதைத் தொடர்ந்து, டிஃபூர் மீது சொத்துகளைச் சேதப்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
அந்த வழக்கு மனநலப் பிரிவு விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வீட்டில் நடந்த தாக்குதல் குறித்து நலம் விசாரித்த அனைவருக்கும், உடனடியாக செயலாற்றிய ரகசிய சேவை மற்றும் சின்சினாட்டி காவல்துறைக்கும் நன்றி தெரிவித்துள்ள துணை அதிபர் ஜேடி வான்ஸ், வீட்டின் உடைந்த ஜன்னல்களின் புகைப்படத்தை வெளியிட்டு செய்தி எழுதியுள்ள ஊடகங்களைக் கடுமையாகச் சாடியுள்ளார்.
இதற்கிடையே இந்த தாக்குதல் துணை அதிபரின் குடும்பத்தினருக்கு எதிரான தாக்குதலா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது
















