பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து ஈரான் தலைநகரில் மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளதால் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் பொருளாதாரத் தடை, பணவீக்கம், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பெட்ரோல் விலை மாற்றம் ஆகிய காரணங்களால் ஈரானில் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்ந்துள்ளது.
இதனால் ஈரானிய நாணயமான ரியால், அமெரிக்க டாலருக்கு எதிராக மிக மோசமான வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. விலைவாசி உயர்வால் ஆத்திரமடைந்த மக்கள் மற்றும் வியாபாரிகள் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வீதிகளில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டக்காரர்களைக் கலைக்கப் போலீசார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசி போராடத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்றிரவு தலைநகர் தெஹ்ரானில் ஏராளமானோர் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அரசு கட்டடங்கள் மற்றும் வாகனங்களுக்கு தீ வைத்ததால் அங்கு அசாதாரண சூழல் நிலவுகிறது. இதையடுத்து பல்வேறு பகுதிகளில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.
















