சென்னை எழும்பூரில் நேற்று 14வது நாளாக போராட்டம் நடத்திய 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நீண்ட காலமாக நிலவி வரும் ஊதிய வேறுபாடுகளை நீக்கி, சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி தமிழகம் முழுவதும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நேற்று 14வது நாளாக சென்னை எழும்பூரில் உள்ள வட்டார கல்வி அலுவலகம் முன்பாக ஆயிரக்கணக்கான இடைநிலை ஆசிரியர்கள் திரண்டு போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களை குண்டுக்கட்டாக கைது செய்தனர். இந்நிலையில் அனுமதி இன்றி கூடுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் 2 ஆயிரத்து 185 இடைநிலை ஆசிரியர்கள் மீது எழும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
















