ஆதார் சேவைகள் குறித்து பொதுமக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில், இந்திய தனித்துவ அடையாள ஆணையம் மாஸ்காட் எனப்படும் அடையாள சின்னத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆதாருக்கான மாஸ்காட் உருவாக்கத்தில் பொதுமக்கள் பங்கு பெறும் வகையில் அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இரண்டு கட்டங்களாக போட்டிகள் நடத்தப்பட்டன. நாடு முழுவதிலும் இருந்து மாணவர்கள், வடிவமைப்பாளர்கள் உட்பட 875 பேர் மாஸ்காட் சின்னங்களை வடிவமைத்து அனுப்பியிருந்தனர்.
அதில் கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த அருண் கோகு என்பவர் வடிவமைத்த மாஸ்காட் தேர்வு செய்யப்பட்டது. பெயர் சூட்டும் பிரிவில் மத்தியபிரதேச மாநிலம் போபாலை சேர்ந்த ரியா ஜெயின் தேர்ந்தெடுத்த உதய் என்ற பெயர் தேர்வு செய்யப்பட்டது.
இதற்கான அறிமுக நிகழ்ச்சி திருவனந்தபுரத்தில் நடந்தது. இதில் இந்திய தனித்துவ அடையாள ஆணைய தலைவர் நீல்கந்த் பங்கேற்று அறிமுகப்படுத்தினார்.
ஆதார் தொடர்பான பத்திரிகை விளம்பரங்கள், வீடியோக்கள் உள்ளிட்டவை உதய் சின்னத்தை வைத்து இனி வெளியிடப்படும்.
















