5 ஏக்கர் நிலத்தில் 1200க்கும் அதிகமான பாரம்பரிய நெல் ரகங்களை ஒரே நேரத்தில் விதைத்து வெற்றிகரமாக சாகுபடி செய்திருக்கும் காரைக்காலைச் சேர்ந்த இயற்கை விவசாயி ஒருவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. யார் அந்த விவசாயி ? பாரம்பரிய நெல் ரகங்களை மீட்க அவர் செய்த முயற்சிகள் என்னென்ன என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
வளர்ந்துவரும் விஞ்ஞான வளர்ச்சிக்கு ஏற்ப மகசூலை பெருக்குவதற்காக பல்வேறு வகையிலான ரசாயன உரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. உரத் தட்டுப்பாடு, நிலத்தடி நீர் பாதிப்பு என விவசாயம் பல்வேறு சவால்களை சந்தித்து வரும் நிலையில் 5 ஏக்கர் நிலத்தில் 1200 பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்து காரைக்கால் விவசாயி ஒருவர் சாதனை படைத்துள்ளார்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் வரிச்சுக்குடி கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயியான பாஸ்கர், இத்தகைய சாதனையை படைத்துள்ளார்.
நம்மாழ்வார் மீதும் இயற்கை விவசாயத்தின் மீதும் அதீத பற்றுக் கொண்டிருக்கும் பாஸ்கர், கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரிய நெல் ரகங்களை மீட்க முயற்சி செய்துள்ளார். அதன் பயனாகவே, தற்போது 1200 நெல் ரகங்களை நேரடி முறையில் சாகுபடி செய்து அறுவடைக்கும் தயார் செய்துள்ளார்.
5 ஏக்கர் நிலப்பரப்பில் தனித்தனியே பாத்திகட்டி, சம்பா, பிச்சைவாரி, சிவப்பு கவுனி, என பல்வேறு அரிய வகை நெல் ரகங்களோடு பாஸ்கர் உருவாக்கியிருக்கும் இந்த நெல் வயல் விவசாய ஆராய்ச்சி கூடமாகவே மாறியுள்ளது.
அரிய வகை நெல் ரகங்களான கருடன் சம்பா, வாழைப்பூ சம்பா, காட்டுயானம், மடுமுழுங்கி என பல்வேறு விதமான பாரம்பரிய நெல்ரகங்களை மீட்டு அவற்றை வெற்றிகரமாக சாகுபடியும் செய்துள்ளார். 1200க்கும் அதிகமான பாரம்பரிய நெல் ரகங்களை வேளாண் கல்லூரி மாணவர்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.
பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டதோடு, தான் மீட்டெடுத்த நெல் ரகங்களை அண்டை மாநிலங்களிலும் விற்பனை செய்து வருகிறார். ஆயிரக்கணக்கான பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டு விவசாயத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தியிருக்கும் இயற்கை விவசாயி பாஸ்கருக்கு புதுச்சேரி அரசாங்கம் உரிய அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
















