இந்தியாவின் முதல் சுற்றுப்பாதை செயற்கைக்கோளில் எரிபொருள் நிரப்பும் செயற்கை கோள் AayulSAT ஆயுள்சாட் விண்ணில் ஏவத் தயார் நிலையில் உள்ளது. எதிர்கால “விண்வெளி எரிபொருள் நிலையங்களுக்கு” ஒரு முக்கியமான சோதனைக்களமாக இந்த செயற்கைக் கோள் இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
ஒவ்வொரு ஆண்டும், சுமார் 1,000க்கும் மேற்பட்ட புதிய செயற்கைக்கோள்கள் ஏவுப் படுகின்றன.முக்கியமாக தொலைத்தொடர்பு துறை சேவைக்காக அதிகமான செயற்கைகோள்கள் ஆண்டுதோறும் பல்வேறு நாடுகளால் விண்ணுக்கு அனுப்பப்படுகின்றன.
காலப்போக்கில் விண்வெளியில் சுற்றிவரும் ஆயிரக்கணக்கான செயற்கைக்கோள்கள் செயலிழந்து விட்டன. மேலும் எரிபொருள் தீர்ந்த பல செயற்கை கோள்கள் செயலிழக்கும் நிலையில் உள்ளன. இந்த செயற்கைக்கோள்களில் எரிபொருள் நிரப்பவும், அவற்றின் ஆயுட்காலத்தை அதிகரிக்கவும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முயன்று வருகின்றன.
விண்வெளியில் ஒரு பிரத்யேக எரிபொருள் நிரப்பும் சேவைக்கான செயற்கைக்கோளை இஸ்ரோ, வரும் 12 ஆம் தேதி ,காலை 10:17 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதல் ஏவுதளத்தில் இருந்து செலுத்த உள்ளது.
இது, 2026ம் ஆண்டில் இஸ்ரோவின் முதல் ஏவுதலாக பிஎஸ்எல்வி-சி 62, இரண்டு ஸ்ட்ராப்-ஆன் பூஸ்டர்களுடன் கூடிய டிஎல் வகையைப் பயன்படுத்தும் 64வது பிஎஸ்எல்வி பயணமாகும்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த OrbitAID Aerospace என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் முதல் செயற்கைக்கோளான AayulSAT- விண்ணில் ஏவுப்பட உள்ளது.
EOS-N1 என்ற முதன்மை புவி கண்காணிப்பு செயற்கைக்கோளுடன், முதன்மையான தொழில்நுட்ப செயல்விளக்கக் கருவி உட்பட 18 துணை செயற்கைக்கோள்களையும் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்த திட்டமிடப் பட்டுள்ளது.
தமிழில் ‘வாழ்நாள்’ என்று பொருள் படும் AayulSAT, நீண்ட ஆயுளை நோக்கமாகக் கொண்ட ஒரு செயற்கைக் கோள் திட்டமாகும்.
25 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக் கோள் , சுற்றுப்பாதையில் எரிபொருள் நிரப்புதல் மற்றும் செயற்கைக்கோளின் ஆயுளை நீட்டிக்கும் அதிநவீனத் தொழில்நுட்பங்களை நிரூபிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பூமியிலிருந்து 800 கிலோமீட்டர் உயரத்தில் உள்ள சூரிய ஒத்திசைவு சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும் இந்த AayulSAT, எதிர்கால “விண்வெளி எரிபொருள் நிலையங்களுக்கு” ஒரு முக்கியமான சோதனைக்களமாகச் செயல்படும் என்று கூறப் பட்டுள்ளது.
பூமியின் சுற்றுப்பாதையில் எரிபொருள் சேமிப்புக் கிடங்குகள் என்பதே ஒரு புரட்சிகரமான கருத்தாகும். இது விண்வெளியில் எரிபொருளைச் சேமித்து, செயற்கைக்கோள்கள் மற்றும் விண்கலங்களுக்கு எரிபொருள் நிரப்பும் சேவைகளை வழங்குவதே இந்த கிடங்குகளின் நோக்கமாகும்.
பல்வேறு விண்வெளித் திட்டங்களின் கால அளவை மேலும் நீட்டிக்கவும், விண்வெளிக் குப்பைகளைக் குறைக்கவும், நிலையான விண்வெளி ஆய்வுகளை மேம்படுத்தவும் AayulSAT, உதவும் என்று கூறப் படுகிறது.
AayulSAT, என்பது விண்வெளிப் பொருளாதாரத்தின் அடித்தளமாகும் என்று OrbitAID Aerospace-ன் நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான சக்திக்குமார் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்
செயல்பாட்டில் உள்ள செயற்கைக்கோள்களின் ஆயுளை நீட்டிப்பதற்காக, சுற்றுப்பாதை சேவை மற்றும் எரிபொருள் நிரப்புதல் (OOSR) தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்துவதற்காக, OrbitAID Aerospace நிறுவனம், 2 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான முதலீட்டில், பெங்களூரில் 6,500 சதுர அடி பரப்பளவில் ஒரு மேம்பட்ட ஆராய்ச்சி மையத்தை உருவாக்கி உள்ளது.
இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் திறந்து வைத்த இந்த மையத்தில், (Rendezvous, Proximity Operations and Docking) ரெண்டெவூஸ் ப்ராக்ஸிமிட்டி ஆபரேஷன்ஸ் மற்றும் டாக்கிங் பணிகளுக்கான ஒரு கட்டுப்பாட்டு அறை, செயற்கைக்கோள் ஒருங்கிணைப்புக்கு ஆதரவளிக்கும் எரிபொருள் பரிமாற்ற அமைப்புகள் மற்றும் பல்வேறு ஆய்வு கூடங்கள் அமைந்துள்ளன.
இந்தியாவில் உள்ள மிகப்பெரிய வணிக Rendezvous, Proximity Operations and Docking உள்கட்டமைப்பு இது என்பது குறிப்பிடத் தக்கது.
முன்னதாக, காமன்வெல்த்தில் உள்ள இந்தோ-ஆஸ்திரேலிய விண்வெளி MAITRI மானியத்தின் கீழ் ஒரு பெரிய ஒப்பந்தத்தை OrbitAID Aerospace பெற்றுள்ளது. அதன்படி, இந்தியாவின் முதல் Standard Interface for Docking & Refueling Port ஸ்டாண்டர்ட் இன்டர்ஃபேஸ் ஃபார் டாக்கிங் அண்ட் ரீஃப்யூவலிங் போர்ட் அமைக்கும் உரிமை பெற்றுள்ளது.
இது விண்வெளியில் இந்தியாவால் உருவாக்கப்பட்ட டாக்கிங் மற்றும் எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பத்தின் முதல் வணிக ரீதியான பயன்பாடு என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
ஏற்கெனவே கடந்த ஆண்டு, தொடக்கத்தில் இஸ்ரோவின் SPADeX திட்டத்த்தில் விண்வெளியில் இரண்டு செயற்கைக்கோள்களுக்கு இடையே இணைப்பை வெற்றிகரமாக செய்தது இந்தியாவின் முதல் சாதனையாகும்.
மேலும்,2027 ஆம் ஆண்டுக்குள் சுற்றுப்பாதை எரிபொருள் நிலையங்களாகச் செயல்பட டேங்கர் செயற்கைக்கோள்களின் தொகுப்பையும் இஸ்ரோவுடன் இணைந்து OrbitAID Aerospace உருவாக்கி வருகிறது.
















