சென்னையில் தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியின்போது, பாஜக மாநில இளைஞர் அணி தலைவர் எஸ்.ஜி சூர்யா, திமுக-வினரால் தாக்கப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை எழும்பூரில் அமைந்துள்ள தனியார் தொலைக்காட்சி அலுவலகத்தின் படப்பிடிப்பு அரங்கில், நேற்றிரவு அரசியல் சார்ந்த ஒரு விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாஜக சார்பில் மாநில இளைஞர் அணி தலைவர் எஸ்.ஜி.சூர்யாவும், திமுக சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் மற்றும் திமுக ஆதரவாளரான செந்தில் வேல் ஆகியோர் கலந்துகொண்டனர்.
விவாத நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட கடும் வாக்குவாதம் முற்றியதில், அங்கு தள்ளுமுள்ளு மற்றும் கைகலப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. குறிப்பாக பாஜக மாநில இளைஞர் அணி தலைவர் எஸ்.ஜி சூர்யா மற்றும் திமுக ஆதரவாளர் செந்தில் வேல் இடையேயான கருத்து மோதலை தொடர்ந்து, செந்தில் வேல் திமுக நிர்வாகிகளை செல்போனில் தொடர்புகொண்டு சம்பவ இடத்திற்கு வரும்படி அழைத்ததாகவும், அவர்கள் வந்த பிறகே தாக்குதல் சம்பவம் அரங்கேற்றப்பட்டதாகவும் தமிழக பாஜக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதனிடையே படப்பிடிப்பு அரங்கில் இருந்து வெளியே வந்த எஸ்.ஜி சூர்யா உள்ளிட்ட பாஜக-வினரை, அங்கு திரண்டிருந்த திமுக-வினர் சுற்றி வளைத்து தாக்கிய வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
குறிப்பாக கட்டடத்தின் மின் இணைப்பை துண்டித்துவிட்டு திமுக-வினர் தாக்குதல் நடத்தியதாகவும், அங்கு வந்த போலீசார் அவர்களை பெயரளவில் மட்டுமே தடுத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தாக்குதலில் காயமடைந்த இளைஞரணி தலைவர் எஸ்.ஜி சூர்யா உள்ளிட்ட பாஜக-வினர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பாக பாஜக சார்பில் எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே எஸ்.ஜி சூர்யா தாக்கப்பட்ட தகவல் அறிந்து பாஜக மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் மற்றும் ஏராளமான பாஜக தொண்டர்கள் அங்கு திரண்டனர். இதனால் பதற்றமான சூழல் நிலவியதையடுத்து அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், படப்பிடிப்பு அரங்கில் இருந்து சிசிடிவி பதிவுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், தாக்குதல் சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்படும் என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து விவாத நிகழ்ச்சி நடைபெற்ற படப்பிடிப்பு அரங்கிற்குள் மது பாட்டில்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. மது பாட்டில்களை அரங்கிற்குள் கொண்டு வந்தது யார்? தாக்குதல் சம்பவத்துடன் இதற்கு தொடர்புள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்றும் பாஜக தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில துணை தலைவர் கரு.நாகராஜன், பத்திரிகை அலுவலகத்துக்குள் நுழைந்து திமுக-வினர் நடத்திய தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது எனவும், கருத்து வேறுபாடுகளை வன்முறையால் அடக்க முயல்வது ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும் தெரிவித்தார். மேலும், இந்த சம்பவத்தை கண்டித்து பாஜக சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அவர் அறிவித்தார்.
















