குஜராத்தில் சோம்நாத் சுவாபிமான் திருவிழாவையொட்டி, மாநிலம் முழுவதும் பக்திமயமாக காட்சியளிக்கிறது.
குஜராத் மாநிலம் வேராவல்லில் உள்ள சோம்நாத் கோயிலில் நடைபெறும் இத்திருவிழாவில் பங்கேற்பதற்காக ராஜ்கோட், சூரத், அகமதாபாத் மற்றும் வதோதரா உள்ளிட்ட முக்கிய நகரங்களிலிருந்து சிவபக்தர்கள் சிறப்பு ரயில்கள் மூலம் சோமநாதபுரம் வந்தனர். வேராவல் ரயில் நிலையத்தை வந்தடைந்த பக்தர்களுக்கு குஜராத் மாநில பாரம்பரிய முறைப்படி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பாரம்பரிய மேளதாளங்கள் முழங்க, ஷெனாய் இசையுடன், கர்பா நடனமாடி தன்னார்வலர்கள் பக்தர்களை வரவேற்றனர். அனைத்து பக்தர்களுக்கும் திலகமிட்டு, மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டன. அப்போது ரயில் நிலையம் முழுவதும் “ஹர ஹர மஹாதேவ்” மற்றும் “ஜெய் சோம்நாத்” ஆகிய முழக்கங்கள் எதிரொலித்து, அந்த இடத்தையே ஆன்மீக அதிர்வலைகளால் நிறைத்தது.
ரயில் நிலையத்திலிருந்து சோம்நாத் கோயிலுக்கு பக்தர்கள் சிரமமின்றிச் செல்வதற்காக பாஜக மாநில அரசு சார்பில் சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. போக்குவரத்து நெரிசலோ அல்லது காலதாமதமோ இன்றி பக்தர்கள் சன்னதியை அடைய இந்தச் சேவை பெரும் உதவியாக இருந்ததாக பக்தர்கள் தெரிவித்தனர்.
















