சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட , இடைநிலை ஆசிரியர்கள், பகுதிநேர ஆசிரியர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் உள்ளிட்ட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சம வேலைக்கு சம ஊதியம் என்ற ஒற்றைக் கோரிக்கையை வலுயுறுத்தி சென்னையில் கடந்த 15நாட்களாக இடை நிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள வாலாஜா சாலையில் ஆயிரக்கணக்கான இடைநிலை ஆசிரியர்கள் தலைமைச் செயலகத்தை நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர். அப்போது அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், ஆயிரத்து 500 இடைநிலை ஆசிரியர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அதேபோல், பணி நிரந்தரம் செய்யக்கோரி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ முற்றுகையிட்டு பகுதி நேர ஆசிரியர்கள் இரண்டாவது நாளாக போராட்டம் நடத்தினர். இந்த நிலையில், 715 பகுதி நேர ஆசிரியர்கள் மீது சட்ட விரோதமாக கூடுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல், உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வலியுறுத்தி சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பனகல் மாளிகை அருகே ஊராட்சி செயலாளர்கள் நான்காவது நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட 878 ஊராட்சி செயலாளர்கள் மீது சைதாப்பேட்டை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
















