உலகளாவிய அரசியல் சூழலில் நிலவும் நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில், நாட்டின் அசைக்க முடியாத பாதுகாப்புச் சுவராக பிரதமர் மோடி விளங்கி வருவதாக ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி பாராட்டியுள்ளார்.
குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் பிரதமர் மோடி தொடங்கி வைத்த மாநாட்டில் முகேஷ் அம்பானியும் பங்கேற்றார்.
அப்போது பேசிய அவர், இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் ஸ்திரத்தன்மை, பொருளாதார வளர்ச்சி நிலவுவதாக கூறினார். இந்தியா வெறுமனே எதிர்காலத்திற்கு தயாராகாமல், எதிர்காலத்தை செதுக்கிக் கொண்டிருப்பதாகக் கூறிய அம்பானி, மோடியின் காலம், திறமைகளை செயல்பாடுகளாக மாற்றிய காலம் என்று வரலாறு கூறும் என்றும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
பின்னர், இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக குஜராத் மாநிலத்திற்கு சில திட்டங்களையும் முகேஷ் அம்பானி அறிவித்தார்.
கடந்த 5 ஆண்டுகளில் ரிலையன்ஸ் நிறுவனம் குஜராத்தில் 3.5 லட்சம் கோடி முதலீடு செய்துள்ள நிலையில், அடுத்த 5 ஆண்டுகளில் இந்த முதலீடு 7 லட்சம் கோடியாக உயர்த்தப்படும் என்று கூறினார்.
மேலும், ஜாம்நகரில் இந்தியாவின் மிகப்பெரிய AI தரவு மையம் அமைக்கவும், உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனை மற்றும் கல்வி நிலையங்களை விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளதாக முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
















