திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள கல்லத்தி மரத்தை பார்வையிட முயன்ற பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவை போலீசார் கைது செய்ததால் பதற்றம் நிலவியது.
திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து அவர் கல்லத்தி மரத்தில் தர்கா தரப்பினரால் ஏற்றப்பட்ட கொடியை போலீசார் அகற்றிவிட்டனரா என்பதை பார்வையிட முயன்றார். அப்போது அவருக்கு போலீசார் அனுமதி மறுத்ததால் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பின்னர் மலையிலிருந்து கீழே இறங்கிய ஹெச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்து மக்களின் கோயில் சொத்துகளை பாதுகாக்க தமிழக அரசும், அறநிலையத் துறையும் தவறி விட்டதாக குற்றம்சாட்டினார். மேலும் இந்து விரோத திமுக ஆட்சிக்கு வரும் தேர்தலில் மக்கள் முடிவுகட்டுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து ஹெச்.ராஜாவை போலீசார் கைது செய்து வாகனத்தில் அழைத்து செல்ல முயன்றனர். அப்போது போலீசாரின் வாகனத்தை முற்றுகையிட்ட மக்கள் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தமிழக அரசுக்கும் காவல் துறைக்கும் அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
பின்னர் மக்களின் போராட்டத்தின் எதிரொலியாக ஹெச்.ராஜா உள்ளிட்ட பாஜகவினரை போலீசார் விடுவித்தனர். அப்போது அரோகரா முழக்கமிட்டு ஹெச்.ராஜாவை அங்கிருந்து மக்கள் வழி அனுப்பி வைத்தனர்.
















