மயிலாடுதுறையில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கக் கட்டியுடன் தப்ப முயன்ற 17 வயது சிறுவனை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் வணிக வளாகத்தில் சுகாஷ் என்பவர் தங்க நகைகளை உருக்கி தரும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
இவரிடம் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் பணியாற்றி வந்துள்ளார். கடையில் சுகாஷ் மற்றும் 17 வயது சிறுவன் மட்டும் பணியாற்றி நிலையில், உருக்கிய ஒன்றரை கிலோ தங்கக்கட்டியை எடைபோட்டு வருமாறு சிறுவனிடம் சுகாஷ் கொடுத்து அனுப்பியுள்ளார்.
கடையின் முகப்பு பகுதிக்கு வந்த சிறுவன், திடீரென தங்க கட்டியுடன் ஓட்டம் பிடித்துள்ளார். இதனை கண்ட சுகாஷ், கூச்சலிட்டபடி சிறுவனை விரட்டினார். ஆனால் சிறுவன், மின்னல் வேகத்தில் தலைமறைவாகியுள்ளார்.
இது குறித்து தகவலறிந்து சென்ற போலீசார், சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். மேலும், திருட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பியோடிய சிறுவனை தேடி வந்தனர்.
இந்நிலையில், 2 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கக் கட்டியுடன் தப்பியோடிய சிறுவனை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
















