ஊடக விவாத மோதல் தொடர்பான வழக்கில் பாஜக மாநில இளைஞரணி தலைவர் எஸ்.ஜி சூர்யா உள்ளிட்ட பாஜக-வினர் 4 பேரை, கைது செய்யக்கூடாது என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை எழும்பூரில் அமைந்துள்ள தனியார் தொலைக்காட்சி அலுவலக படப்பிடிப்பு அரங்கில், பாஜக மாநில இளைஞரணி தலைவர் எஸ்.ஜி சூர்யா மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது திமுக-வினர் சரமாரி தாக்குதல் நடத்தினர். இந்த வழக்கில் எஸ்.ஜி சூர்யா உள்ளிட்ட பாஜக-வினர் 4 பேர் மீது வேப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அதனைத் தொடர்ந்து முன் ஜாமின் கோரி எஸ்.ஜி சூர்யா உள்ளிட்ட 4 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அதில் தாக்குதல் நடத்திய செந்தில் வேல் உள்ளிட்ட திமுக-வினர் மீது வழக்கு பதியாமல், காவல்துறை உள்நோக்கத்துடன் தங்கள் மீது வழக்கு பதிந்துள்ளதாக தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், மனுவை விசாரித்த நீதிபதி ராஜசேகர் இந்த வழக்கில் பதிலளிக்க வேப்பேரி காவல்துறைக்கு உத்தரவிட்டார். அப்போது, காவல்துறை தரப்பில் பதிலளிக்க கால அவகாசம் கோரப்பட்டது.
அதனடிப்படையில், வழக்கு விசாரணையை அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைத்த நீதிபதி, அதுவரை எஸ்.ஜி சூர்யா உள்ளிட்ட பாஜக-வினரை கைது செய்யக்கூடாது என காவல்துறைக்கு உத்தரவிட்டார்.
















