முதுமலை வனப்பகுதியை ஆக்கிரமிக்க தொடங்கியுள்ள கேடு விளைவிக்கும் அந்நிய நாட்டு பார்த்தீனிய செடிகளை அகற்ற நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. வன விலங்குகளின் உயிர் குடிக்கும் செடிகளை பற்றிய செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
முதுமலை புலிகள் காப்பகம், நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு முக்கிய வனவிலங்கு சரணாலயமாகும். இது யானைகள், புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் வாழ்விடமாக மட்டுமின்றி தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களின் எல்லைப் பகுதியாகவும் அமைந்துள்ளது. சந்தனம், தேக்கு உள்ளிட்ட விலை உயர்ந்த மரங்களும், அரிய வகை மூலிகைகளும் இங்கு கொட்டி கிடக்கின்றன. அது மட்டுமின்றி வனவிலங்கு சரணாலயம், யானைகள் முகாம், காட்டு சஃபாரி போன்ற சுற்றுலா அம்சங்கள் உள்ளதால் இப்பகுதி சுற்றுலா பயணிகளின் விருப்ப தேர்வாக உள்ளது.
ரம்மியமான சூழலில் காட்சியளிக்கும் இப்பகுதி கோடை காலத்தில் சில நேரங்களில் வறட்சியால் பாதிக்கப்படுகின்றன. அந்த சமயத்தில் காட்டு யானைகள், மான்கள், காட்டெருமைகள் போன்ற தாவர உண்ணிகளுக்கு பசுந்தீவன தட்டுப்பாடும் ஏற்படுகிறது. இதனால் உணவு தேடி அவை குடியிருப்புகளை நோக்கி படையெடுக்க தொடங்குகின்றன.
தற்போது வறட்சி தொடங்கியுள்ளதால், முதுமலை வனப் பகுதிகளில் மரம், செடி, கொடிகள் அனைத்தும் கருகத் தொடங்கி உள்ளன. ஆனால் வனவிலங்குகள் மட்டுமின்றி சுற்றுச் சூழலுக்கும் கேடு விளைவிக்கும் உன்னி செடிகளோ அடர்ந்து வளர தொடங்கியுள்ளன. வனப்பகுதி முழுவதும் பார்த்தீனியம் செடிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு காணப்படுகின்றன. எங்கு திரும்பி பார்த்தாலும் பார்த்தினீய செடிகளே நிரம்பியுள்ளன.
இதனால் காட்டு யானைகள், மான்கள், காட்டெருமைகள் உள்ளிட்ட வன விலங்குகளுக்கு பசுந்தீவன தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. வனவிலங்குகளின் உடல் நலன் பாதிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே பார்த்தீனியம் செடிகளை முழுமையாக கட்டுப்படுத்த வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
வட அமெரிக்காவை தாயகமாக கொண்ட இந்த பார்த்தீனியம் செடி நாடு முழுவதும் பரவி உள்ளதாக இயற்கை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக உயிர் சூழல் மண்டலமான நீலகிரி மாவட்டத்தின் முதுமலை, முக்குறுத்தி, பார்சன்வேலி உள்ளிட்ட வனப் பகுதிகளில் அதிகளவு ஆக்கிரமித்துள்ளதாக அவர்கள் புள்ளி விவரங்களுடன் குறிப்பிடுகின்றனர். வனவிலங்குகளுக்கு மட்டுமின்றி மனிதர்களின் உடல் நிலையிலும் கேடு விளைவிக்கும் இவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
இயற்கையை பாதுகாக்கும் வனப்பகுதிகளை, ஆக்கிரமித்து கேடு விளைவிக்கும் அந்நிய நாட்டு செடிகளை அகற்ற நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
















