தமிழகம் முழுவதும் அதிகாலையிலேயே பழைய பொருட்களை எரித்தும், வீட்டு வாசலில் வண்ண கோலமிட்டும் பொதுமக்கள் போகி பண்டிகையை விமரிசையாக கொண்டாடினர்.
நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன் வீட்டில் உள்ள தேவையில்லாத பொருட்களை எரித்து “பழையன கழிதலும், புதியன புகுதலும்..” என்ற அடிப்படையில் போகி பண்டிகையினை கொண்டாடி வந்துள்ளனர். அதன்படி, தமிழகம் முழுவதும் போகி பண்டிகையை மக்கள் வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, சென்னையின் பல்வேறு பகுதிகளில் அதிகாலைலேயே பழைய பொருட்களை எரித்து போகிப் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர். பழைய எண்ணங்களையும், கசப்பான தருணங்களையும், வாழ்வில் மறக்க முடியாத நினைவுகளையும் தீயிட்டு கொளுத்தியதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இளைஞர்கள் போதைப் பழக்கத்தில் இருந்து விடுபட்டு நல்ல நிலைக்கு வரவேண்டும் எனக் கூறினர்.
இதேபோன்று, காஞ்சிபுரத்தில் ஆங்காங்கே பொதுமக்கள் தங்களது வீட்டு வாசலில் பழைய பொருட்களை எரித்து போகி பண்டிகையை கொண்டாடினர். அப்போது, சிறுவர்கள் போகி மேளம் அடித்து மகிழ்ந்தனர். இதனை தொடர்ந்து, பெண்கள் வீட்டு வாசலில் வண்ண கோலமிட்டு தீபம் ஏற்றி வழிபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சுற்றுவட்டாரப் பகுதிகளில் பழைய பொருட்களை வீட்டின் முன்பு எரித்து பொதுமக்கள் போகி பண்டிகையை விமரிசையாக கொண்டாடினர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி, கிருஷ்ணாபுரம், சிறுகடம்பூர், வி.பி.என்.நகர், பீரங்கிமேடு உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலையிலேயே வீட்டின் முன்பு பழைய பொருட்களை எரித்து பொதுமக்கள் போகி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர்.
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர், திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, ஊத்துக்கோட்டை, ஆரம்பாக்கம், கும்மிடிபூண்டி, பொன்னேரி, மீஞ்சூர், சோழவரம், செங்குன்றம், தாமரைப்பாக்கம், வெள்ளவேடு உள்ளிட்ட பகுதிகளில் போகி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
ஆந்திர மாநிலம், திருப்பதி ஏழுமலையான் கோயில் முன்பு போகி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. ஏழுமலையான் கோயில் முன் விறகுகள் குவித்து வைக்கப்பட்ட நிலையில், அதன் மீது கற்பூரத்தை வைத்து அதிகாரிகள் தீ வைத்து போகி பண்டிகையை கொண்டாடினர்.
















