கும்பகோணம் அருகே உள்ள சூரியனார் கோயிலின் சாவியை உயர்நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் அறநிலையத்துறை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள சூரியனார் கோயில் ஆதீனம் 28வது குருமகா சந்நிதானமாக இருந்த மகாலிங்க தேசிக பரமாசாரியார் சுவாமிகள் பெங்களூரை சேர்ந்த பெண் பக்தர் ஒருவரை திருமணம் செய்து கொண்டதால் கடந்தாண்டு நவம்பர் 12ஆம் தேதி மடத்திலிருந்து வெளியேறினார்.
இதனை தொடர்ந்து, அறநிலையத்துறை சார்பில் பட்டீஸ்வரம் செயல் அலுவலரை ஆதீனத்தின் நிர்வாக பொறுப்பாளராக நியமித்து, ஒரு சிவாச்சாரியாரை கொண்டு நாள்தோறும் ஒருகால பூஜை மட்டும் நடத்தப்பட்டது.
இதனிடையே, ஆதீனம் நிர்வாக பொறுப்பை மீண்டும் ஒப்படைக்க கோரி மகாலிங்க சுவாமி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது. சூரியனார் கோயில் ஆதீனத்தின் குருமகா சந்நிதானமாக இருக்கும் தகுதியை மகாலிங்க சுவாமி இழந்துவிட்டதால், சாவியை திருவாவடுதுறை ஆதீனம் குருமகா சந்நிதானத்திடம் ஒப்படைக்க வேண்டும் என அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், கோயில் செயல் அலுவலர் நிர்மலாதேவி சூரியனார் கோவில் ஆதீனம் மடத்தின் சாவியை திருவாடுதுறை ஆதீனம் 24 வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகளிடம் வழங்கினார்.
















