விண்ணில் ஏவப்பட்ட இஸ்ரோவின் PSLV-C62 ராக்கெட் தனது 3-ம் கட்டத்தில் பாதை தவறியதால், EOS-N1 செயற்கைக்கோள் உட்பட பல வணிக செயற்கைக்கோள்களை இழக்க நேரிட்டது.
இதனால் பாதுகாப்புத்துறை மற்றும் பல தனியார் விண்வெளி நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், PSLV-யின் மீள் ஏவுதல் மற்றும் நம்பகத்தன்மை குறித்து எழுந்துள்ள சந்தேகங்களை சரி செய்து மீண்டு வரும் என நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் PSLV ராக்கெட், தொடர்ந்து 2-வது முறையாக தோல்வியை சந்தித்தது. ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து ஏவப்பட்ட PSLV-C62 ராக்கெட், EOS-N1 பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் உள்ளிட்ட பல செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தபோது, 3-ம் கட்டத்தின் இறுதியில் ஏற்பட்ட கோளாறால் திட்டமிட்ட பாதையைவிட்டு விலகியது. இது குறித்து விளக்கமளித்த இஸ்ரோ தலைவர் வி.நாராயணன், 3-ம் கட்டம் வரை ராக்கெட்டின் செயல்திறன் எதிர்பார்த்தபடி இருந்ததாகவும், இறுதியில் அதில் பாதை மாற்றம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார். இதற்கான காரணங்கள் குறித்து விரைவில் ஆய்வு செய்து விளக்கம் அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையே, இந்த தோல்வி ஹைதராபாத்தைச் சேர்ந்த துருவா ஸ்பேஸ் நிறுவனத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. POLAR ACCESS-1 திட்டத்தின் கீழ் விண்ணில் செலுத்தப்பட்ட பல செயற்கைக்கோள்களை அந்நிறுவனம் இழக்க நேரிட்டுள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அந்நிறுவனத்தின் தலைவர் சஞ்சய் நேக்கந்தி, விண்வெளி ஏவுதல்கள் சிக்கலானவை என்பதை தங்கள் நிறுவனம் உணர்ந்துள்ளதாகவும், விரைவில் தங்கள் செயற்கைக்கோள்களை மீண்டும் ஏவ தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். அதேபோல, ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனரான பவன் குமார் சந்தனாவும், இஸ்ரோவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தனது கருத்தை பதிவு செய்தார். மிக நம்பகமான ராக்கெட்டுகளுக்கும் தடுமாற்றங்கள் ஏற்படலாம் எனவும், அதில் இருந்து கற்றுக்கொண்டு எத்தனை விரைவில் மீள்கிறோம் என்பதே முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இஸ்ரோவில் 64 ஏவுதல்களில் 5 தோல்விகள் இருந்தாலும், PSLV-யின் சாதனைகள் அதைவிட வலிமையானது என்பதை இந்த கருத்துக்கள் நினைவூட்டுகின்றன. எனினும், இஸ்ரோ இதனை நேரடி தோல்வியாக அறிவிக்க வேண்டும் என விண்வெளித்துறை சார்ந்த நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அதே நேரத்தில், சமீப காலமாக ஏற்பட்டு வரும் தோல்விகள் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய செயற்கைக்கோள்களையே அதிகமாக பாதித்துள்ளதால், இது பாதுகாப்புத்துறை சார்ந்தவர்களிடையே பெரும் கவலைவும், சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது. குறிப்பாக GISAT, RISAT-1B, NavIC NVS-02 மற்றும் தற்போது EOS-N1 என தொடர்ந்து ஏற்பட்ட பின்னடைவுகள், இது தனிப்பட்ட சம்பவங்களா அல்லது அமைப்பு சார்ந்த பிரச்னையா என்ற கேள்வியை அவர்களிடம் எழுப்பியுள்ளன.
மனிதர்கள் பங்கேற்கும் ககன்யான் திட்டம் போன்ற முக்கிய பணிகளை முன்னெடுக்க, வெளிப்படைத்தன்மையுடன் கூடிய நடைமுறை மீண்டும் வலுப்பெற வேண்டும் என துறை சார்ந்த நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர். மற்றொருபுறம் PSLV ராக்கெட்டின் நம்பகத்தன்மை குறித்து உலகளாவிய வணிக வாடிக்கையாளர்களும் கூர்ந்து கவனித்து வரும் நிலையில், 3-ம் கட்டத்தில் ஏற்பட்ட கோளாறின் காரணத்தை கண்டறிந்து நம்பகமான திருத்த நடவடிக்கைகளை அறிவிக்க வேண்டிய கட்டாயத்திற்கு இஸ்ரோ தள்ளப்பட்டுள்ளது.
மொத்தத்தில், இந்த பின்னடைவு இஸ்ரோவுக்கு அதிக வலிகளை அளித்திருந்தாலும், இது அவர்களுக்கு விண்வெளித்துறையின் கடினமான தன்மையை மீண்டும் நினைவூட்டியுள்ளது. இதனால் கடந்த காலங்களில் பல சவால்களை எதிர்கொண்ட இஸ்ரோ, இம்முறையும் பெற்ற தோல்வியில் இருந்து பாடம் கற்று கூடுதல் வலிமையுடன் மீண்டு வரும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது.
















