ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீதம் உடனடி வரிவிதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ள்ளார். இந்தப் புதிய வரி விதிப்பு அமலுக்கு வந்தால், இந்தியாவும் கடுமையாக பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு
தொடர்ந்து 13 வது நாளாக நடந்துவரும் மக்கள் போராட்டங்கள், கடந்த 47 ஆண்டுகால ஈரான் வரலாற்றில் முன்னெப்போதும் பார்த்திராத உச்சத்தை எட்டியுள்ளது.
அதிகரித்து வரும் பணவீக்கம் எதிரொலியாக தொடங்கிய போராட்டங்கள், நாட்டின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கொமேனியின் அடிப்படைவாத இஸ்லாமிய மதகுருமார்களின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையாக மாறியுள்ளன.
அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் ஒரு மோசமான சூழலை எதிர்கொண்டு வரும் ஈரான் அரசுக்கும், உச்ச தலைவருக்கும் எதிரான போராட்டங்கள் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளன.
போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கடவுளின் எதிரி என்று கருதப்படுவார்கள் என்றும், இது மரண தண்டனைக்குரிய குற்றம் என்றும் ஈரானின் அட்டர்னி ஜெனரல் எச்சரித்துள்ள நிலையில், போராடும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள், ட்ரம்பை மகிழ்விக்கும் வன்முறையாளர்கள் என்று அயதுல்லா அலி கொமேனி கூறியுள்ளார்.
இதுவரை 646 பேர் கொல்லப் பட்டுள்ள நிலையில், 10,700-க்கும் மேற்பட்டோர் தேச விரோத குற்றசாட்டின் பேரில் சிறைப்பிடிக்கப் பட்டுள்ளனர்.
முன்னதாக, ஈரானில் நாடு முழுவதும் தெருக்களில் இறங்கிப் போராடும் மக்கள் கொல்லப்பட்டதற்காக அந்நாடு மீது தாக்குதல் நடத்தப் போவதாக அச்சுறுத்திய அதிபர் ட்ரம்ப், ஈரான் சுதந்திரத்தை எதிர்பார்ப்பதால் அமெரிக்கா உதவத் தயாராக உள்ளது என்று தெரிவித்தார்.
இந்நிலையில், ஈரானுடன் வர்த்தகம் செய்யும் அனைத்து நாடுகளுக்கும் 25 சதவீத உடனடி வரிவிதித்து அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
இதனால், ஈரானுடன் அதிக அளவில் வர்த்தகம் செய்து வரும் இந்தியா,ரஷ்யா,சீனா, துருக்கி மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப் படுகிறது.
ஏற்கெனவே, ரஷ்யாவில் இருந்து எண்ணெய் கொள்முதல் செய்வதைக் காரணம் காட்டி, இந்தியாவுக்கு முதலில் 25 சதவீத வரியும் பின்னர்,கூடுதல் 25 சதவீத வரியும் அதிபர் ட்ரம்ப் விதித்தார்.
சமீபத்தில், இந்தியா, சீனா, பிரேசில் உள்ளிட்ட ரஷ்ய எண்ணெய் வாங்கும் நாடுகளுக்குக் கூடுதலாக 500 சதவீத வரி விதிக்கும் சட்ட மசோதாவுக்கு ட்ரம்ப் ஒப்புதல் அளித்தார்.
ஈரானின் 90 சதவீத எண்ணெயை சீனாவே வாங்குகிறது. சீனாவுக்குப் பிறகு, இந்தியா ஈரானின் இரண்டாவது பெரிய வர்த்தக நாடாக உள்ளது. தனது கச்சா எண்ணெய் தேவைகளில் 80 சதவீதத்துக்கும் அதிகமாக ஈரானில் இருந்தே இந்தியா இறக்குமதி செய்கிறது.
கடந்த நிதியாண்டில் இந்தியாவிற்கும் ஈரானுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் சுமார் 15 ஆயிரத்து 160 கோடியாக இருந்தது. ஈரானுக்கு 11 ஆயிரத்து 191 கோடி மதிப்புள்ள பொருட்களை இந்தியா ஏற்றுமதி செய்தது. அதே நேரத்தில் ஈரானில் இருந்து 3 ஆயிரத்து 970 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. இதன்படி, இந்தியாவுக்கு சுமார் 7 ஆயிரத்து 220 கோடி ரூபாய் வர்த்தக உபரியாக இந்தியாவுக்குக் கிடைத்துள்ளது.
ஈரானின் சர்க்கரை மற்றும் அரிசி தேவையில் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமானதை இந்தியாவே பூர்த்தி செய்கிறது.
ஆண்டுதோறும் 12,000 கோடி ரூபாய் மதிப்பில் சுமார் 12 லட்சம் டன் அரிசி இந்தியாவில் இருந்து ஈரானுக்கு ஏற்றுமதி ஆகிறது.
ஏற்கெனவே ஈரானில் மக்கள் போராட்டங்கள் தொடங்கிய உடனேயே, ஈரானுக்கான இந்திய ஏற்றுமதிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி ஈரானுக்கு செல்ல வேண்டிய 2 ஆயிரம் கோடி மதிப்பிலான பாஸ்மதி அரிசியின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது
இது தவிர உரங்கள்,வேளாண் இரசாயனங்கள் மற்றும் இயந்திரங்கள் உலோகங்கள், இரும்பு மற்றும் எஃகு, வேதியியல் இரசாயனங்கள் மற்றும் மருந்துகள், பதப்படுத்தப்பட்ட தாதுக்கள், பாலியஸ்டர் நூல் மற்றும் நெய்த துணிகள் மற்றும் ரப்பர் உற்பத்திப் பொருட்கள் ஆகிய பொருட்களும் பெருமளவில் ஏற்றுமதி செய்யப் படுகிறது.
பிளாஸ்டிக் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள், கண்ணாடி மற்றும் கண்ணாடிப் பொருட்கள், இயற்கை மற்றும் வளர்ப்பு முத்துக்கள், விலைமதிப்பற்ற ரத்தினங்கள், தோல் பொருட்கள், பாதாம், பிஸ்தா, பேரீச்சம்பழம் மற்றும் குங்குமப்பூ ஆகிய பொருட்களை இந்தியா ஈரானிடமிருந்து இறக்குமதி செய்கிறது.
மேலும், பாகிஸ்தானைத் தவிர்த்துவிட்டு, ஈரான் வழியாக ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசியா முழுவதும் வர்த்தகம் செய்வதற்காக , கடல் மற்றும் தரை வழியை மேம்படுத்தும் வகையில் ஈரானின் சபாகர் துறைமுகத்தில் உள்ள ஷாஹித், பெஹெஷ்டி வளாகம் உட்பட இரண்டு முனையங்களை இந்தியா 10 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்துள்ளது.
சபாகர் துறைமுகத்திலிருந்து ஈரானின் சிஸ்தான் மற்றும் ஆப்கானின் எல்லை அருகே உள்ள பலுசிஸ்தானின் தலைநகரான சஹேடான் வரை சுமார் 600 கிலோமீட்டர் ரயில் பாதையையும் இந்தியா அமைத்து வருகிறது. இந்தச் சூழலில், ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் 25 சதவீத வரி விதித்துள்ளார்.
இரு நாடுகளும் இடையேயான வர்த்தக ஒப்பந்தம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ட்ரம்பின் இந்த புதிய வரிவிதிப்பு இந்தியா-அமெரிக்க உறவுகளை மேலும் பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது.
















