உலகின் பழமையான மொழியான தமிழின் தாயகமாக இந்தியா திகழ்வது நமக்குப் பெருமை என பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு இ-மெயில் மூலம் பிரதமர் மோடி வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.
அதில், மனிதனின் உழைப்பிற்கும், இயற்கையின் இசைவிற்கும் இடையே உள்ள நெருங்கிய தொடர்பை இந்த சிறப்புவாய்ந்த பொங்கல் பண்டிகை நமக்கு நினைவூட்டுவதாகத் தெரிவித்துள்ள பிரதமர் மோடி,
வேளாண்மை, விவசாயிகளின் கடின உழைப்பு, கிராமப்புற வாழ்க்கைமுறை ஆகியவற்றுடன் இந்தப் பண்டிகை ஆழமாக பிணைந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பொங்கல் பண்டிகையால் தலைமுறைகளைக் கடந்து, உறவுகள் வலுப்பெறுவதுடன், ஒற்றுமை உணர்வு மேலோங்குவதாகவும்,
கடின உழைப்பு மூலம் நமது வாழ்க்கையை செம்மைப்படுத்துவோருக்கு நன்றி தெரிவிக்கும் திருநாளாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மேலும், உலகின் பழமையான மொழியான தமிழின் தாயகமாக இந்தியா திகழ்வது நமக்குப் பெருமை என நெகிழ்ச்சி பொங்க குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி,
இந்த தைத்திருநாள், அனைவர் வாழ்விலும் அபரிமிதமான செழிப்பு, வெற்றி மற்றும் நல்ல ஆரோக்கியத்தை கொண்டுவரட்டும் என்றும் தனது வாழ்த்துச் செய்தியை நிறைவு செய்துள்ளார்.
















