வாணியம்பாடி அருகே கண்டுபிடிக்கப்பட்ட நடுக்கல், விஜயநகர மன்னர்கள் ஆட்சி காலத்தைச் சேர்ந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே தமிழக – ஆந்திர எல்லைப் பகுதியான அலசந்தாபுரம் இடத்தில் உள்ள தனியார் நிலத்தில் விவசாய பணிகள் மேற்கொண்டபோது புதர் மண்டிய நிலையில் ஒரு கல் கண்டறியப்பட்டுள்ளது.
பின்னர், அந்த கல்லை சுத்தம் செய்து கிராம மக்கள் வழிபட்டு வந்த நிலையில், நடுக்கல் குறித்து திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியரும் வரலாற்றியல் ஆய்வாளருமான பிரபு, அந்த பகுதியில் களப்பணி மேற்கொண்டார்.
அதில், 5 அடி அகலமும், 8 அடி உயரமும் கொண்ட நடுக்கல்லில் 3 உருவங்கள் செதுக்கப்பட்டிருப்பதை கண்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வரலாற்றியல் ஆய்வாளர் பிரபு, போரில் வீரமரணமடைந்த வீரனுக்காக இந்த நடு கல் வைக்கப்பட்டிருக்கலாம் என தெரிவித்தார்.
வீரனின் உருவ அமைப்பைப் பார்க்கும் போது, இந்த நடுகல்லானது விஜயநகர மன்னர்கள் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் எனவும் கூறினார்.
















