குடியரசு தினவிழாவை சீர்குலைக்க பயங்கரவாதிகளால் சதித்திட்டம் தீட்ட வாய்ப்பு உள்ளது என்ற மத்திய அரசின் எச்சரிக்கையை அடுத்து தமிழத்தில் உச்சகட்ட பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஜனவரி 26 ஆம் தேதி நாடு முழுவதும் குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னை காமராஜர் சாலை உழைப்பாளர் சிலை அருகே முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றிவைக்கிறார்.
இந்த குடியரசு தினவிழாவை சீர்குலைக்க பயங்கரவாதிகளால் சதித்திட்டம் தீட்ட வாய்ப்புள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பேருந்து, ரயில் நிலையங்கள், வழிபாட்டுத்தலங்கள், வணிக வளாகங்கள் என பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என கூறப்பட்டுள்ளது.
















