பாலிவுட்டில் மத ரீதியிலான பாகுபாடு உள்ளதாக ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்த கருத்துக்கு, கங்கனா ரனாவத் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில் தனது கருத்து குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம் அளித்துள்ளார். அது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அண்மையில் BBC Asian network நிறுவனத்திற்கு பேட்டி அளித்திருந்தார். அப்போது, சத்ரபதி சம்பாஜி மகாராஜின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட சாவா திரைப்படம் குறித்தும், அதில் பணியாற்றிய அனுபவம் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த ஏ.ஆர்.ரஹ்மான், சாவா திரைப்படம் பிரிவினையை பேசும் திரைப்படம் எனவும், பிரிவினையை முன்வைத்து அப்படம் பணம் சம்பாதித்ததாக கருதுவதாகவும் கூறினார். மேலும், ரோஜா, பாம்பே, உயிரே ஆகிய 3 படங்களுக்கு இசையமைத்த காலத்தில், இந்தி சினிமாவிற்கு சம்மந்தப்படாத வெளியாள் போல உணர்ந்ததாகவும் தெரிவித்தார்.
ஏன் அவ்வாறு உணர்ந்தீர்கள் என பேட்டி காண்பவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ரஹ்மான், நான் இந்தி மொழி பேசாமல் இருந்தது அதற்கு காரணமாக இருக்கலாம் என தெரிவித்தார். தமிழர்களுக்கு இந்தி கற்றுக்கொள்வது மிகவும் கடினமான காரியம் எனவும், தங்களுக்கு தமிழ்ப்பற்று மிக அதிகமாக உள்ளதாகவும் கூறினார்.
அத்துடன், கடந்த 8 ஆண்டுகளாக தனக்கு வாய்ப்புகள் குறைந்துவிட்டதாகவும், சினிமா துறை சமூகம் சார்ந்ததாக மாறிவிட்டதாகவும்
ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்தார். “இசைத்துறையின் அதிகார கட்டமைப்பில் ஏற்பட்ட மாற்றம் இதற்கு காரணமாக இருக்கலாம். படைப்பாற்றல் இல்லாதவர்கள்தான் அனைத்து முடிவுகளையும் எடுக்கும் இடத்தில் உள்ளனர். இது சமூகம் தொடர்பானதாகவும் இருக்கக்கூடும்” எனவும் அவர் விமர்சன பார்வையை முன்வைத்தார்.
ஏ.ஆர்.ரஹ்மானின் இந்த கருத்துகள் முக்கிய பேசுபொருளாகின. குறிப்பாக, பாலிவுட்டில் மத ரீதியிலான பாகுபாடு உள்ளதாகவும், அதனால் தனக்கு வாய்ப்புகள் குறைந்ததாகவும் அவர் கூறிய கருத்துக்கு, பலரும் கண்டனம் தெரிவிக்க தொடங்கினர். இது குறித்து கருத்து தெரிவித்த இந்தி பாடலாசிரியரும், திரைக்கதை ஆசிரியருமான ஜாவேத் அக்தர், ரஹ்மானின் கருத்துகளை நான் ஏற்க மாட்டேன் என தெரிவித்துள்ளார். அத்துடன் பாலிவுட் சினிமா சமூக சார்புடையதாக மாறிவிட்டதாக தான் கருதவில்லை எனவும் கூறியுள்ளார்.
அதேபோல, கங்கனா ரனாவத்தும் தனது கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். தான் நடித்த எமர்ஜென்சி படம் தொடர்பாக ரஹ்மானை சந்திக்க சென்றபோது, அவர் சந்திக்க மறுத்துவிட்டதாகவும், பிரச்சார படத்தில் பணியாற்ற முடியாது என அவர் தெரிவித்துவிட்டதாகவும் கங்கனா ரனாவத் குறிப்பிட்டுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் போன்ற பாரபட்சமும், வெறுப்பும் கொண்ட மனிதரை தான் பார்த்ததே இல்லை எனவும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
எழுத்தாளர் ஷோபா டே, பின்னணி பாடகர் ஷான் உள்ளிட்ட பலரும் ஏ.ஆர்.ரஹ்மானின் கருத்துக்கு கண்டனமும், எதிர்ப்பும்
தெரிவித்துள்ளனர். மறுபுறம், ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சரான மெக்பூபா முக்தி, பின்னணி பாடகி சின்மயி உள்ளிட்டோர் ரஹ்மானின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்த சூழலில், தனது கருத்து குறித்து ஏ.ஆர்.ரஹ்மானே தற்போது வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். “சில நேரங்களில் நமது நோக்கங்கள் தவறாக புரிந்துகொள்ளப்படும் என்பதை புரிந்துகொள்கிறேன். ஆனால், இசையின் மூலம் கலாச்சாரங்களை உயர்த்துவதும், கொண்டாடுவதும்தான் எனது குறிக்கோள். மாறாக, எந்த சூழலிலும் பிறர் வருந்த வேண்டும் என நான் நினைக்க மாட்டேன்.” என ஏ.ஆர்.ரஹ்மான் தெளிவுபடுத்தியுள்ளார்.
மேலும், இந்தியனாக இருப்பதில் பெருமையடைவதாகவும், ஏனெனில், கருத்து சுதந்திரத்திற்கு இந்தியாவில் எப்போதும் வாய்ப்பளிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி முன்னிலையில் பல்வேறு இசைக்குழுக்களுடன் இணைந்து இசை நிகழ்ச்சி நடத்தியதையும், ராமாயண படத்திற்கு இசையமைத்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியாதான் எனது உத்வேகம். இந்தியாதான் எனது ஆசிரியர். இந்தியாதான் எனது எனது வீடு என தெரிவித்துள்ள ஏ.ஆர்.ரஹ்மான், ஜெய்ஜிந்த், ஜெய் ஹோ எனக்கூறி அந்த வீடியோவை நிறைவு செய்துள்ளார்.
















