ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சீனர்களால் நடத்தப்படும் ஒரு சீன உணவகத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் ஒரு சீனர் உட்பட 7 பேர் கொல்லப் பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள ஐஎஸ் தீவிரவாதிகள், இது தற்கொலைப் படை தாக்குதல் என்றும் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானுடன் 76 கிலோமீட்டர் கரடுமுரடான எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது சீனா.
2021 ஆம் ஆண்டில், தலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, சீனா தலிபான்களின் நம்பகமான நட்பு நாடாகவே உள்ளது. தலிபான்கள் தலைமையிலான ஆட்சியில் தூதரை நியமித்த முதல் நாடு சீனா என்பது குறிப்பிடத் தக்கது.
இதனால் பாதுகாப்புப் பிரச்சனை இருந்த போதிலும் ஏராளமான சீன சுற்றுலா பயணிகள் ஆப்கானுக்குச் சென்று வருகின்றனர்.
சுமார் 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புடைய ஆப்கானிஸ்தானின் கனிம வளங்களில் பெருமளவில் சீனா முதலீடு செய்துள்ளது. சுரங்கத் துறை மட்டுமின்றி பல்வேறு துறைகளில் பல பொருளாதார ஒப்பந்தங்களில் இருநாடுகளும் கையெழுத்திட்டுள்ளன.
வர்த்தகர்கள், முதலீட்டாளர்கள், பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் வணிக ஆலோசகர்கள் என நூற்றுக்கணக்கான சீன முஸ்லிம்கள், ஆப்கானிஸ்தானில் பணிபுரிந்து வருகின்றனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உயர்தர பாதுகாப்பான பகுதிகளில் ஒன்றாக ஷார்-இ-நாவ் பகுதி உள்ளது. இந்த மிகப் பெரிய வணிகப் பகுதியில் தான் வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் பல வணிக நிறுவனங்கள் உள்ளன. வெளிநாட்டினர் அதிகளவில் வந்து செல்லும் இப்பகுதியில் உள்ள சீன உணவகத்தில் தான் குண்டு வெடிப்பு நடந்துள்ளது.
சீனாவைச் சேர்ந்த அப்துல் மஜித், தனது மனைவி மற்றும் அப்துல் ஜபார் மஹ்மூத் என்ற ஆப்கானிய வணிகப் பங்குதாரருடன் சேர்ந்து இந்த உணவகத்தை நடத்தி வந்தார்.
பெரும்பாலும் காபூலில் வசிக்கும் சீன முஸ்லீம்களும், ஆப்கானுக்கு வரும் சீனர்களும் இந்த உணவகத்தின் வாடிக்கையாளர்களாக இருந்து வந்துள்ளனர்.
ஒரு பெரிய ஹோட்டலுக்குள் அமைந்திருந்த இந்த உணவகத்தில் திங்கட்கிழமை வெடிகுண்டு வெடித்ததில் அயூப் என்ற சீனரும், ஆறு ஆப்கானியரும் கொல்லப் பட்டுள்ளனர். ஒரு குழந்தை உட்பட 20 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சீன அரசு ஒளிபரப்பு நிறுவனமான சிசிடிவி, இந்த குண்டுவெடிப்பில் இரண்டு சீனர்கள் பலத்த காயமடைந்துள்ளதாகவும் ஒரு சீன பாதுகாப்பு ஊழியர் கொல்லப்பட்டதாகவும் கூறியுள்ளது.
ஆப்கானிஸ்தான் மண்ணிலிருந்து செயல்படும் பயங்கரவாதிகள், தஜிகிஸ்தான் உட்பட பிற அண்டை நாடுகளில் தாக்குதல் நடத்தியுள்ளதைச் சுட்டிக் காட்டியுள்ள பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, எந்த பயங்கரவாதக் குழுக்களுக்கும் பாதுகாப்பான புகலிடமாக ஆப்கானிஸ்தானை அந்நாட்டு அரசு அனுமதிக்கக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இந்த குண்டுவெடிப்பு வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளன.
உணவகக் கட்டிடத்தின் முன்புறத்தில் ஒரு பெரிய பள்ளத்திலிருந்து கிளம்பிய புகை தெருவில் பரவியதையும், கான்கிரீட், கண்ணாடி மற்றும் உலோகத் துண்டுகள் சாலையெங்கும் சிதறிக் கிடப்பதையும், பீதியடைந்த மக்கள் அந்தப் பகுதியிலிருந்து தப்பி ஓடுவதையும், அவசரகால மீட்புப் படையினர் இடிபாடுகளை அகற்றுவதையும் வீடியோவில் காண முடிகிறது.
இந்த தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ள ஐஎஸ்ஐஎஸ் என்றும் அழைக்கப்படும் இஸ்லாமிய தீவிரவாதிகளின்ஆப்கானிஸ்தான் கிளை, இது ஒரு தற்கொலைப் படை தாக்குதல் என்றும் கூறியுள்ளது. கூடுதலாக, உய்குர் முஸ்லீம்களுக்கு எதிராக சீன அரசு செயல்பட்டு வருவதால், சீனர்கள் தங்கள் தாக்குதல் பட்டியலில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் வசிக்கும் சுமார் 10 மில்லியன் முஸ்லிம் இனச் சிறுபான்மையினரான உய்குர்களுக்கு எதிராக கடுமையான மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாக நீண்ட காலமாகவே கூறப்படும் குற்றச்சாட்டுகளைச் சீனா தொடர்ந்து மறுத்து வருகிறது.
ஏற்கெனவே ஆப்கானிஸ்தானிலும், அதன் எல்லைகளிலும் சீனர்கள் மற்றும் வணிக நிறுவனங்களைத் குறிவைத்து தாக்குதல்கள் நடந்துள்ள நிலையில் இந்த வெடிகுண்டுதாக்குதல் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
















