கர்நாடாகாவில் பணி நேரத்தில் இளம்பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொண்ட ஆபாச வீடியோக்கள் வைரலான நிலையில், மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி ராமச்சந்திர ராவை சஸ்பெண்ட் செய்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது
கர்நாடக மாநிலத்தில், சிவில் உரிமைகள் அமலாக்க இயக்குநரகத்தின் காவல்துறை தலைமை இயக்குநராக 59 வயதான ராமச்சந்திர ராவ் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த ஆண்டு தங்க கடத்தலில் ஈடுபட்டு கைதாகி பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகை ரன்யா ராவின் தந்தை ஆவார்.
ராமச்சந்திர ராவின் வளர்ப்பு மகள் நடிகை ரன்யா ராவ் ‘வாகா’ என்ற தமிழ் படத்தில் நடிகர் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரன்யா ராவின் தங்க கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக அப்போதே ராமச்சந்திர ராவ் புகார் எழுந்தது. இதன் காரணமாக, கடந்த ஆண்டு கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்ட ராமச்சந்திர ராவ் சமீபத்தில் தான் சிவில் உரிமைகள் அமலாக்க இயக்குநரகத்தின் டிஜிபியாக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், தனது அதிகாரப்பூர்வ அலுவலகம் போல் தோன்றும் ஒரு இடத்தில்,அலுவலக நேரத்தில் போலீஸ் சீருடையில் இருந்தபடி ராமச்சந்திர ராவ், பெண்களைக் கட்டிப்பிடித்து முத்தமிடுவது போன்ற ஆபாச வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
1993-ஆம் ஆண்டு கர்நாடகப் பிரிவைச் சேர்ந்த IPS அதிகாரியாக பணியில் சேர்ந்த ராமச்சந்திர ராவ், 2014ம் ஆண்டு கர்நாடக மாநில தெற்கு மண்டல காவல்துறைத் தலைவராக இருந்த போதே பண மோசடி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
ஓய்வு பெறுவதற்கு இன்னும் 120 நாட்களே இருக்கும் நிலையில் ஆபாச வீடியோக்கள் விவகாரத்தில் ராமச்சந்திர ராவ் சிக்கியுள்ளார்.
இந்த வீடியோக்கள் 2017-ஆம் ஆண்டு, ராமச்சந்திர ராவ் பெலகாவியில் வடக்கு ரேஞ்சின் காவல் துறைத் தலைவராக இருந்தபோது படமாக்கப்பட்டன என்று காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பெண்கள் வெவ்வேறு சமயங்களில் டிஜிபி ராமச்சந்திர ராவின் அறைக்கு பலமுறை வந்துள்ளனர் என்பதைக் காட்டும் வீடியோக்களில் ஒவ்வொரு முறையும் பெண்கள் வெவ்வேறு ஆடைகளில் வருவதும்,அவர்களை டிஜிபி முத்தமிடும் ஆபாச காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.
காவல் துறை சீருடையில் இருந்தபோது ராவின் இந்த நடத்தை, அவரது ஒழுக்கம், கட்டுப்பாடு மற்றும் அதிகாரப்பூர்வ வளாகத்தைப் பயன்படுத்திய விதம் ஆகியவைக் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளன.
மூத்த பாஜக சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சர் எஸ். சுரேஷ் குமார், இதை ஒரு அவமானகரமான செயல் என்றும் மன்னிக்க முடியாத குற்றம் என்றும் கூறியிருந்த நிலையில், டிஜிபி ராமச்சந்திர ராவை சஸ்பெண்ட் செய்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஒரு அரசு ஊழியருக்குப் பொருத்தமற்ற ஆபாசமான ராவின் நடத்தை, அரசுக்கு அவமானத்தை ஏற்படுத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ள சஸ்பெண்ட் உத்தரவில், இடைநீக்கக் காலத்தில் மாநில அரசிடம் இருந்து எழுத்துப்பூர்வ அனுமதி பெறாமல், தலைமையகத்தை விட்டு வெளியேறவும் ராவுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, டிஜிபி ஆபாச வீடியோ குறித்து திங்கள்கிழமைதான் தனக்குத் தெரியவந்ததாக தெரிவித்த முதலமைச்சர் சித்தராமையா, காவல் துறை அதிகாரி எவ்வளவு வயது மூத்தவராக இருந்தாலும் தவறான நடத்தை உண்மையாக இருக்குமென்றால் ஒழுங்கு நடவடிக்கை நிச்சயம் எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
















