சமூக வலைதளத்தில் இளம்பெண் ஒருவர் வெளியிட்ட வீடியோ, ஒரு நபரின் உயிரையே குடித்துள்ள சம்பவம் கேரளாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.. வீடியோ வெளியிட்ட பெண் தலைமறைவான நிலையில், விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது
கேரள மாநிலம் வடகரா பகுதியைச் சேர்ந்த ஷிம்ஜிதா முஸ்தபா என்பவர், அண்மையில் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார்… பேருந்தில் பயணம் செய்த நபர், தவறான நோக்கத்துடன் தமமை தொட்டதாகக் கூறி, சம்பந்தப்பட்ட நபரின் வீடியோவையும் வெளியிட்டிருந்தார்… இந்த வீடியோ 23 லட்சம் பார்வைகளை கடந்த நிலையில், இளம்பெண்ணின் குற்றச்சாட்டுக்கு ஆளான கோழிக்கோடு கோவிந்தபுரத்தைச் சேர்ந்த தீபக்கின் கவனத்திற்கும் சென்றது… தனியார் ஜவுளி நிறுவனத்தில் பணியாற்றிய தீபக், ஷிம்ஜிதாவின் வீடியோவை பார்த்து கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானார்…
தான் அவ்வாறு செய்யவில்லை என்பதை உறவினர்களிடம் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கும் தள்ளப்பட்டார்… இதனால் விரக்தியடைந்த அவர், 17ம் தேதி இரவு படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 18ம் தேதி காலையில் அவரது அறை நீண்ட நேரமாக திறக்கப்படாத நிலையில், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அவர் சடலமாக கிடந்தது தெரியவந்தது..
வீடியோ வைரலாக வேண்டும் என்ற நோக்கத்துடன் ஷிம்ஜிதா முஸ்தபா சமூக வலைதளங்களில் பதிவிட்டிருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. குற்றச்சாட்டு உண்மையாகவோ, பொய்யாகவோ இருக்கலாம் என்ற விவாதம் ஒரு பக்கம் இருந்தாலும், வீடியோ வெளியீட்டால் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சமூக வலைதளங்களில் விவாத தீயாக மாறியது… வீடியோ வெளியிட்ட பெண்ணுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கண்டன குரல்கள் வலுத்த நிலையில், அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தை டீ-ஆக்டிவேட் செய்துவிட்டு தலைமறைவானார்…
துவக்கத்தில் இந்த விஷயத்தில் போலீசார் இயற்கைக்கு மாறான மரணம் என்றே வழக்கு பதிவு செய்திருந்தனர். பின்னர் தீபக்கின் தாயார் அளித்த கன்யகா அளித்த புகாரின் பேரில், இளம்பெண் மீது, தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட ஜாமினில் வெளிவர முடியாத பிரிவுகளில் கோழிக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்… இதுபோன்ற துயர சம்பவம் யாருக்கும் இனிமேல் நடக்கக் கூடாது என தீபக்கின் உறவினர்கள் வேதனையுடன் கூறினர்..
தீபக் அமைதியான, ஒழுக்கமான மனிதன் என்றும், அவர் யாருக்கும் இதுவரை எவ்வித பிரச்னையையும் கொடுத்ததில்லை என்று அவரது தந்தை சோய் கண்ணீருடன் தெரிவித்தார்… தீபக்கால் அவமானத்தை தாங்க முடியாததால் இந்த விபரீத முடிவை எடுத்துவிட்டதாகவும் விம்மி அழுதார்.. தனது மகனுக்கு எதிராக சமூக ஊடகங்களில் இவ்வளவு பெரிய விவாதம், பிரசாரம் நடந்த கொண்டிருந்தது அப்போது தங்களுக்கு தெரியாது என்றும் தீபக்கின் பெற்றோர் கூறினர்..
இந்த விவகாரத்தை கையில் எடுத்த மனித உரிமைகள் ஆணையம், போலீசார் விசாரணை நடத்தி ஒருவாரத்தில் அறிக்கை அளிக்கும்படி, கேரள வடக்கு மண்டல டிஐஜி-க்கு உத்தரவிட்டது… பிப்ரவரி 19ம் தேதி கோழிக்கோட்டில் விசாரணை நடைபெற வேண்டும் என்றும் மனித உரிமைகள் ஆணையம் தனது உத்தரவில் தெரிவித்தது.. அதே நேரத்தில் தீபக்கின் குடும்பத்தினருக்கு வழக்கு சம்பந்தமான அனைத்து உதவிகளையும் செய்வதாக ஆல் கேரளா மென்ஸ் அசோசியேஷன் அறிவித்தது….
குற்றம்சாட்டிய ஷிம்ஜிதா முஸ்தபாவின் செல்போன் அணைக்கப்பட்டுள்ள நிலையில், அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்… பெண்ணின் செல்போனை கைப்பற்றி அதில் இருக்கும் வீடியோ திருத்தப்பட்டதா அல்லது சிதைக்கப்பட்டதா என்பதையும் ஆய்வுக்கு உட்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். அதுமட்டுமின்றி அன்றைய தினம் பேருந்தில் பயணம் செய்த பயணிகள், நடத்துநர் ஆகியோரிடமும் வாக்குமூலம் பெற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன… வழக்கு தீவிர விசாரணைக்குள் நுழைந்துள்ள நிலையில், சம்பந்தபட்ட நபருக்கு நியாயம் கிடைக்குமா என்பது விரைவில் தெரியவரும் என்று எதிர்பார்க்கலாம்…
















