இருக்கையில் அமர்ந்த பின்னரே இனி எம்பிக்கள் வருகையை பதிவு செய்ய முடியும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 28ஆம் தேதி கூடவுள்ள நிலையில், பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட் தாக்கலாகிறது.
இது தொடர்பாக, உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, வருகையை பதிவு செய்ய நாடாளுமன்ற வளாகங்களில் ஒரே நேரத்தில் எம்பிக்கள் கூடுவதால் நெரிசல் ஏற்படுகிறது என்றும், இதனை தடுக்கும் வகையில் புதிய நடைமுறையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
எம்பிக்கள் இருக்கையில் அமர்ந்த பின் தங்களது மேஜையில் உள்ள நவீன சாதனங்களை பயன்படுத்தி வருகையை பதிவு செய்யலாம் எனவும் கூறியுள்ளார்.
மேலும், புதிய நடைமுறை வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிமுகமாக உள்ளதாக ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.
















