சட்டவிரோத செயலில் ஈடுபடும் இந்து சமய அறநிலையத்துறையை வன்மையாக கண்டிப்பதாக, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆளுநரின் மக்கள் மாளிகை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை, தமிழக அரசு மக்கள் நலனில் எத்தகைய வகையில் செயல்படுகிறது என்பதை வெளிப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுநரின் அறிக்கையில், பல ஆயிரம் கோயில்களில் அறங்காவலர்களை நியமிக்காமல் நீதிமன்ற தீர்ப்பை அரசு அலட்சியப்படுத்தி, அதிகாரிகள் துணையோடு முறைகேடுகள் நடைபெறுவது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறியுள்ள காடேஸ்வரா சுப்பிரமணியம்,
இந்த குற்றச்சாட்டிற்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவும், சட்ட அமைச்சர் ரகுபதியும் தெரிவித்த பதில்களில் கோயில் எண்ணிக்கை குறித்த தகவல் முரணாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற அமர்வு கொடுத்த பெரும்பாலான வழிகாட்டுதல்களை செயல்படுத்த இயலாது என பல மாதங்கள் கழித்து இந்து சமய அறநிலையத் துறை சீராய்வு மனு தாக்கல் செய்த நிலையில், சட்ட அமைச்சர் ரகுபதி வழிகாட்டுதல்களை நிறைவேற்றியதாக தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
சட்ட அமைச்சருக்கே தமிழக அரசின் நிலைப்பாடு என்னவென்று தெரியவில்லையா? என கேள்வி எழுப்பியுள்ள காடேஸ்வரா சுப்பிரமணியம்,
ஆளுநர் அலுவலகம் குறிப்பிட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து முழுமையான விசாரணை மேற்கொண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
















