தருமபுரி அருகே இருசமூகத்தினரிடையே மோதலை தூண்டும் வகையில் பேசி, ஆடியோ வெளியிட்ட திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல்நிலையத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.
மானியதஅள்ளி பகுதியை சேர்ந்த செல்வம் என்ற திமுக நிர்வாகி, அண்மையில் ஒரு சமூகத்தை பற்றி இழிவாக பேசி ஆடியோ வெளியிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் இரு சமூகத்தினர் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
இது குறித்து கேட்ட இளைஞருக்கு, திமுக நிர்வாகி செல்வம் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து மாற்று சமூகத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர், திமுக நிர்வாகி செல்வத்தை கைது செய்ய கோரி தொப்பூர் காவல்நிலையத்தில் மனு அளித்தனர்.
இதனை தொடர்ந்து திமுக நிர்வாகி செல்வத்தை, காவல்நிலையத்திற்கு வரவழைத்து போலீசார் விசாரணை செய்தனர்.
அப்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை அவர் ஒப்புக்கொண்டார்.
இருப்பினும் இது தொடர்பான ஆடியோவை சமூக வலைத்தளத்தில் தான் பதிவிடவில்லை எனவும் திமுக மாவட்ட துணை செயலாளர் இந்த ஆடியோவை வெளியிட்டிருக்கலாம் எனவும் செல்வம் போலீசாரிடம் தெரிவித்தார்.
இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
















