ரஷ்யாவில் 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பனி பொழிந்து வருவதால் பல இடங்களில் வீடுகள், வாகனங்கள் புதைந்துள்ளன.
ரஷ்யாவின் தொலைதூர கிழக்குப் பகுதியான கம்சட்கா தீபகற்பத்தில் கடந்த சில வாரங்களாக ஏற்பட்டுள்ள கடுமையான பனிப்பொழிவு 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான நிலையை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இரண்டு வாரங்களாக தொடர்ந்து பனிப்பொழிவு அதிகரித்து வரும் நிலையில், கம்சட்கா தீபகற்பத்தில் சூழல் மிக மோசமாக உள்ளது.
பல மாதங்களுக்கு பொழிய வேண்டிய பனி சில நாட்களிலேயே கொட்டியதால், சில இடங்களில் 15 அடி உயரம் வரை பனிக்கட்டிகள் மலைபோல் குவிந்துள்ளன.
இதன் காரணமாக கம்சட்காவின் முக்கிய நகரமான பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சட்ஸ்கி முழுவதும் பனியால் மூடப்பட்டுள்ளது.
தெருக்கள், கட்டடங்கள், கார்கள், வீடுகள் அனைத்தும் பனியால் புதைந்துள்ளன. இதையடுத்து அப்பகுதியில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
















