ஈரானில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை அந்நாட்டு அரசு எவ்வாறு ஒடுக்கியது என்பது குறித்த தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. போராட்டக்காரர்கள் அனைவரும் நிர்வாணமாக நிற்க வைத்தும், மர்மமான ஊசிகளை செலுத்தியும் சித்ரவதை செய்யப்பட்டதும் தெரிய வந்துள்ளது.
விலைவாசி உயர்வு, கரன்சி மதிப்பு சரிவு, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்டவற்றை கண்டித்தும், மத குருக்களின் ஆட்சிக்கு எதிராகவும் ஈரானில் கடந்த மாதம் போராட்டம் வெடித்தது. அந்நாட்டில் 1979ம் ஆண்டு நடைபெற்ற மக்கள் புரட்சியுடன் ஒப்பிடும் அளவுக்கு, இப்போராட்டத்தின் தீவிரம் இருந்தது. ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், கண்டன முழக்கங்கள், பேரணிகள் என ஒட்டுமொத்த ஈரானே ஸ்தம்பித்தது.
கொஞ்சம் அசந்தாலும் மக்கள் போராட்டம் ஆட்சி மாற்றத்திற்கு வித்திட்டுவிடும் என்பதை உணர்ந்த ஆட்சியாளர்கள், போராட்டக்காரர்கள் மீது வன்முறைகளை கட்டவிழ்க்க தொடங்கினர். அதன் விளைவாக, வெறும் ஒருசில வாரங்களில் சுமார் 5,000 மக்கள் கொன்றுகுவிக்கப்பட்டனர். இந்த கொலைகள் எவ்வாறு நிகழ்த்தப்பட்டன என்பது குறித்து தற்போது அடுத்தடுத்து பல அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இது குறித்து இங்கிலாந்தை மையமாக கொண்ட டெய்லி எக்ஸ்பிரஸ் நிறுவனம் விரிவான செய்தியை வெளியிட்டுள்ளது. போராட்டங்களில் ஈடுபட்டு கைதான மக்கள் நேராக சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். அனைவரையும் சிறை முற்றத்தில் நிற்க வைத்த போலீசார், அவர்களின் ஆடைகளை களைந்து நிர்வாணப்படுத்தியுள்ளனர். பின்னர், குழாய்கள் மூலம் மிகவும் குளிர்ந்த நீரை பீய்ச்சி அடித்து சித்ரவதை செய்துள்ளனர். அத்துடன், சிறை ஊழியர்கள் ஏதோ ஒரு திரவத்தை ஊசி மூலம் போராட்டக்காரர்களின் உடலுக்குள் செலுத்தியுள்ளனர். அது என்ன திரவம், எதற்காக அது செலுத்தப்பட்டது என்பது குறித்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. இந்த தகவல்களை எல்லாம் பாதிக்கப்பட்ட மக்களும், அவர்களுக்கு நெருக்கமானவர்களும் தெரிவித்துள்ளனர்.

கெர்மன்ஷா உள்ளிட்ட பல நகரங்களில் கைதான பெண்களை பாதுகாப்பு படையினர் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரமும் அரங்கேறியுள்ளது. பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டவர்களில் 16 வயது சிறுமியும் அடக்கம் என, KHRN எனப்படும் குர்திஸ்தான் மனித உரிமைகள் வலையமைப்பு தெரிவித்துள்ளது.
ஈரானின் பல பகுதிகளில் கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டுள்ளது. இது குறித்து விவரித்துள்ள ஈரான்வாசி ஒருவர், அடுத்தடுத்த கொலைகளால் தெருக்கள் அனைத்தும் ரத்தமயமாக காட்சி அளித்ததாகவும், அதிகாரிகள் அவற்றை தண்ணீர் லாரிகள் மூலம் சுத்தம் செய்ததாகவும் கூறியுள்ளார். இருந்தபோதும் Tajrish, Narmak உள்ளிட்ட பகுதிகளில் காற்றில் வீசிய ரத்த வாடையை அவர்களால் போக்க முடியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதில் கொடூரத்தின் உச்சம் என்னவென்றால், சுடுவதற்கு பயன்படுத்தப்பட்ட தோட்டாக்களுக்கான பணத்தை, கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினரிடமே பாதுகாப்பு படையினர் கேட்டுள்ளனர். இத்தகைய அடக்குமுறைகளால் ஒவ்வொரு வீதியிலும் குறைந்தபட்சம் இரண்டு அல்லது மூன்று பேர் கொல்லப்பட்டதாக, பிபிசியிடம் ஒருவர் பேட்டியளித்துள்ளார்.
போராட்டக்காரர்கள் மீது நடத்தப்படும் இத்தகைய அடக்குமுறைகள் வெளிஉலகத்திற்கு தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக, ஈரான் அரசு முதல் வேலையாக இணைய தொடர்பை துண்டித்துவிட்டது. ஸ்டார்லிங் மூலம் தகவல் கசியாமல் இருக்க, சீனா அல்லது ரஷ்ய ராணுவத்தின் உயர்தர ஜாமர் பயன்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், பொதுமக்களின் வீடுகளில் சோதனை மேற்கொண்டு, அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த தொலைதொடர்பு கருவிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு படையினரும், அதிகாரிகளும் தகவல்களை பரிமாறிக்கொள்ள whitelist எனப்படும் ரகசிய நெட்வொர்க் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த HRANA என்ற நிறுவனம், ஈரானின் இதுவரை 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளது. சுமார் 26,000 பேர் கைது செய்யப்பட்டதாகவும், குறைந்தது 5,800 பேர் பலத்த காயமடைந்துள்ளதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. ஆனால், மற்ற நிறுவனங்கள் கூறும் எண்ணிக்கை வேறாக உள்ளது.
ஈரான் போராட்டத்தில் சுமார் 12,000 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என ஈரான் இன்டர்நேஷனல் நிறுவனமும், 20,000 வரை உயிரிழந்திருக்கலாம் என அமெரிக்காவின் சிபிஎஸ் நியூஸ் நிறுவனமும் கூறுகின்றன. கொல்லப்பட்ட இந்த அத்தனை பேருக்கும் மொஹரேப் என ஈரான் அரசு முத்திரை குத்தியுள்ளது. அதாவது, கடவுளுக்கு எதிராக போர் தொடுத்தவர்கள்.
கொலைசெய்யப்பட்டவர்களின் உடல்களை ஈரான் அரசு கறுப்பு பைகளில் சுற்றி கீழே கிடத்தி வைத்திருந்த வீடியோக்கள் தற்போது வெளியாகியுள்ளன. கொல்லப்பட்ட தனது மகனின் உடலை, தாய் ஒருவர் தேடி அலையும் வீடியோ மனதை கனக்க செய்வதாக உள்ளது.
நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்வது, மர்ம ஊசிகளை செலுத்துவது, கண்மூடித்தனமாக சுட்டு தள்ளுவது போன்றவை ஹிட்லரின் ஆட்சியில் யூதர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கொடூரங்கள். இந்த பாணியை தனது சொந்த நாட்டு மக்கள் மீதே தற்போது உபயோகப்படுத்தியுள்ளது ஈரான் அரசு.
ஈரான் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் எப்படி ஒடுக்கப்பட்டார்கள் என்ற இந்த தகவல்கள் அனைத்தும், Tip of the iceberg மட்டுமாக கூட இருக்கலாம். வெளிவராத மேலும் பல உண்மைகள் உள்ளே புதைந்திருக்கலாம்.
















