அமெரிக்க அதிபர் டிரம்பால் அறிவிக்கப்பட்ட காசா அமைதி வாரியம் தற்போது சர்வதேச அமைதி வாரியமாக மாறியுள்ளது.
மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் காசாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையே இரண்டு ஆண்டுகள் நீடித்த போர் கடந்த ஆண்டு அக்டோபரில் முடிவுக்குக் வந்தது. அப்போது அமெரிக்க அதிபர் டிரம்ப் 20 அம்ச காசா அமைதி திட்டத்தை அறிவித்தார்.
இதன் ஒரு பகுதியாக காசாவில் அமைதியை ஏற்படுத்துவது ,புனரமைப்பு பணிகள் மேற்கொள்வது போன்றவற்றுக்கு காசா அமைதி வாரியம் அமைக்கப்படும் என அறிவித்தார்.
இதில் இணையும்படி இந் தியா உட்பட 60 நாடுகளுக்கு அவர் அழைப்பு விடுத்தார். இந்நிலையில் சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடக்கும் உலக பொருளாதார மன்ற கூட்டத்துக்கு இடையே அமைதி வாரியம் தொடர்பான அறிவிப்பை டிரம்ப் வெளியிட்டார்.
அதற்கான இலட்சினை, திட்டங்கள் உள்ளிட்டவற்றையும் அவர் அறிவித்தார். அதன்படி உலக அளவிலான மோதல்களுக்கு தீர்வு காணும் வகையில் இந்த வாரியம் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிபர் டிரம்ப், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் உள்ளிட்டோர் சாசனத்தில் கையெழுத்திட்டனர்.
















