எல்லையில் நின்று நாட்டைக் காப்பதோடு, நாட்டு மக்களின் பசியையும் வறுமையையும் போக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் இந்திய ராணுவ வீரர் சக்தி பாலுக்கு, பாராட்டு குவிந்து வருகிறது.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த 31 வயதான ராணுவ வீரர் சக்தி பால், 5 ஆண்டுகளுக்கு முன்பு, பணி முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, சாலையில் ஒரு முதியவர் பசியால் மயங்கிக் கிடப்பதைக் கண்டார். அந்த ஒரு காட்சி சக்தியின் வாழ்க்கையை மாற்றியது. தனது சொந்தச் சேமிப்பைக் கொண்டு, சாலையோரம் வசிப்பவர்களுக்கு உணவு சமைக்கத் தொடங்கினார்.
இலவசமாக வழங்கினால் உணவின் மீது மரியாதை குறைந்துவிடும் என்பதற்காக, ஒரு ரூபாய்க்கு உணவு வழங்கும் பணியினை தொடங்கினார். நாள்தோறும் 600-க்கும் மேற்பட்டோர் இதன் மூலம் பயன்பெற்று வருகின்றனர்.
மேலும், சிலிகுரி பகுதியில் உள்ள ஏழை மாணவர்களின் கல்விக்காகப் பள்ளி உபகரணங்களையும், வசதியற்ற குடும்பங்களுக்குப் புத்தாடைகள் மற்றும் போர்வைகளை வழங்கியும் சமூகப் பணியாற்றி வருகிறார்.
















