தேச விடுதலைக்காக அதிகப்படியான சுதந்திரப் போராட்ட தியாகிகளை தமிழகம் தந்துள்ளது என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூரில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 129வது பிறந்த நாள் விழா நடைபெற்றது.
இந்த விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு நேதாஜியின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து, சுதந்திரப் போராட்ட தியாகிகளை கௌரவப்படுத்தினார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், சுதந்திர இந்தியாவிற்காக போராடியவர்களில் தமிழகத்தில் இருந்தே அதிகம் பேர் பங்கேற்றதாக புகழாரம் சூட்டினார்.
நாட்டின் விடுதலைக்காக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உடன் இணைந்து போராடியவர்களின் விவரங்களை சேகரித்து அதை உலகிற்கு தெரிவிக்க வேண்டும் என்றும், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் போராடியவர்களை கௌரவப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
மேலும், நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய அனைவரையும் நினைவுகூர்ந்து அவர்களுக்கும் நாம் மரியாதை செலுத்த வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி கேட்டுக்கொண்டார்.
















