ஜனநாயகன் படத்தின் தணிக்கை சான்று தொடர்பான வழக்கில் வரும் 27ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.
ஜனநாயகன் தணிக்கை சான்றிதழ் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு கடந்த 20ஆம் தேதி நடைபெற்றது. அப்போது, தணிக்கை வாரியத்தின் தரப்பில், ஜனநாயகன் திரைப்படத்தை மறுதணிக்கை செய்ய கால அவகாசம் கேட்டு தயாரிப்பு நிறுவனத்தை அணுகியதாகவும், மறுதணிக்கை செய்ய கூடுதலாக 20 நாள்கள் தேவைப்படுவதாகவும் தெரிவித்தனர்.
அதன் பின்பும், சான்றிதழ் கொடுக்க தங்கள் தரப்பில் தாமதமானால் தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தை நாடலாம் எனவும், வழக்கு தொடராமல் இருந்திருந்தால் இந்நேரம் திரைப்படம் வெளியாகியிருக்கும் என்றும் தணிக்கை வாரியம் தரப்பில் வாதிட்டனர்.
தொடர்ந்து, படத் தயாரிப்பு நிறுவன தரப்பு வழக்கறிஞர், மறுதணிக்கை குறித்து தணிக்கை வாரியம் தங்களை முறையாக அணுகவில்லை எனவும், டிசம்பர் 29ஆம் தேதிக்குப் பின் அனைத்தும் தங்களிடமிருந்து மறைக்கப்பட்டு விட்டதாகவும், தணிக்கை விவகாரத்தில் வெளிப்படைத்தன்மை இல்லாதது விதிமீறலாகவே கருத வேண்டும் என்றும் கூறினார்.
இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்திருந்தனர். இந்நிலையில், வரும் 27ஆம் தேதி காலை 10.30 மணிக்கு முதல் வழக்காக விசாரித்து தீர்ப்பு வழங்க உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
















