குடியரசு தின விழாவை முன்னிட்டு வரும் 26ம் தேதி சென்னை மெரினா கடற்கரை சாலை பகுதியில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, வரும் 26ம் தேதி காமராஜர் சாலையில் காந்தி சிலை முதல் போர் நினைவுச் சின்னம் வரை காலை 6 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அடையாறில் இருந்து பிராட்வே செல்லும் சரக்கு மற்றும் வணிக வாகனங்கள், கிரீன்வேஸ் சாலையில் நுழைந்து அண்ணா சாலை வழியாக செல்லலாம்.
பிராட்வே செல்லும் பிற வாகனங்கள், காந்தி சிலை சந்திப்பில் ராதாகிருஷ்ணன் சாலை வழியாக ராயப்பேட்டை நோக்கி திருப்பிவிடப்படும்.
மயிலாப்பூர், நடேசன் சாலை, டாக்டர் பெசன்ட் சாலை, வாலாஜா சாலை உள்ளிட்ட சாலைகளில் வரும் வாகனங்கள் அனைத்தும் திருப்பிவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாரிமுனையில் இருந்து அடையாறு செல்லும் வாகனங்கள் ரிசர்வ் வங்கி சுரங்கபாதையில் செல்லாமல் வடக்கு துறைமுகச் சாலை வழியாக செல்லுமாறும் போக்குவரத்துக் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
















