சத்தீஸ்கர் மாநிலத்தில் இரவோடு இரவாக 60 அடி நீள இரும்பு பாலம் திருடப்பட்ட சம்பவம் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சத்தீஸ்கரின் கோர்பா மாவட்டத்தின் தோதிபாராவில் உள்ள கால்வாயின் மீது 60 அடி நீளமும், 5 அடி அகலமும் கொண்ட இரும்பு பாலம் ஒன்று அமைந்திருந்தது. இதனை கடந்த 40 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் கரையை கடக்க பயன்படுத்தி வந்தனர்.
சுமார் 30 டன் எடையுள்ள இந்த இரும்பு பாலத்தை இரவோடு இரவாக சிலர் திருடிச் சென்றனர். இந்நிலையில் வழக்கம் போல் காலையில் எழுந்து மறுகரைக்கு செல்ல வந்த மக்கள், இரும்பு பாலத்தை காணாததால் அதிர்ச்சி அடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், கேஸ் கட்டர்களை பயன்படுத்தி இரும்பை வெட்டி பாலத்தை திருடிச் சென்றதை கண்டுபிடித்தனர்.
திருடப்பட்ட இரும்பு பாலத்தின் மதிப்பு 15 லட்சம் ரூபாய் இருக்கும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதே போல அந்த பாலத்தின் அருகே நீர் குழாயைச் சுற்றியிருந்த இரும்பு பாதுகாப்பு உறையையும் திருடர்கள் தூக்கிச் சென்றது தெரியவந்தது.
நல்வாய்ப்பாக கேஸ் கட்டர்கள் நீர் குழாயை சேதப்படுத்தாததால் கோர்பாவில் வசிக்கும் இரண்டரை லட்சத்திற்கும் அதிகமானோர் தண்ணீர் பற்றாக்குறையில் இருந்து தப்பியுள்ளனர்.
காணாமல் போன பாலத்தை கண்டுபிடிக்க போலீசார் சிறப்பு குழு ஒன்றை அமைத்துள்ளனர்
















