இந்திய நாகரிகம் என்பது சுமார் இரண்டு லட்சம் ஆண்டுகள் பழமையானது என்றும், பழங்குடியின மக்களே சனாதன தர்மத்தின் ஆணிவேர் என்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற பழங்குடியினர் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கலந்துகொண்டார். அப்போது உரையாற்றிய அவர், இந்திய நாகரிகம் என்பது சுமார் இரண்டு லட்சம் ஆண்டுகள் பழமையானது என்றும், கால மாற்றங்களுக்கு மத்தியிலும் அதன் அடிப்படை ஒற்றுமை இன்றுவரை சிதையாமல் தொடர்வதாகவும் கூறினார்.
மேலும், இன்று நாம் யாரை பழங்குடியினர் என்று அழைக்கிறோமோ, அவர்களே இந்து மதம் மற்றும் கலாச்சாரத்தின் ஆணிவேர் என்றார்.
பழங்குடியின மக்களிடம் மதம் இல்லை என்று கூறுவது முற்றிலும் தவறானது என்று தெரிவித்த மோகன் பாகவத், பழங்குடியினரிடம் பண்டைய காலத்திலிருந்தே தனித்துவமான வழிபாட்டு முறைகளும், அதற்குப் பின்னால் ஆழமான தத்துவக் கருத்துக்களும் நம்பிக்கைகளும் இருந்து வருகின்றன என்றும், அவை இன்றும் செழிப்பாகத் தொடர்வதாகவும் குறிப்பிட்டார்.
















