பழனி தைப்பூச திருவிழாவுக்காக உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கோயில் தரப்பு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
பழனியில் தைப்பூச திருவிழாவின் போது கூட்ட நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், அதனை தடுக்க காவல்துறை மற்றும் கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்து ஆலய பாதுகாப்பு அமைப்பின் துணைத்தலைவர் சுவாமி நாதன் தாக்கல் செய்த இந்த மனுவை நீதிபதி எஸ்.ஸ்ரீமதி விசாரித்தர்.
அப்போது கோயில் தரப்பின் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது, அதில் பழனிக்கு செல்லக்கூடிய வழியில் பக்தர்களுக்கு குடிநீர், கழிவறை, உணவு உள்ளிட்டவை வழங்கப்படுவதாகவும், கூட்ட நெரிசலை தவிர்க்க கூடுதலாக போலீசார் நியமிக்கப்படுவர் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்ததோடு பக்தர்களை ஒழுங்குபடுத்தும் பணியின் போது கோயில் நிர்வாகத்துக்கு மனுதாரர் மற்றும் அவரது குழுவினர் உதவ வேண்டும் என உத்தரவிட்டார்.
















