மணாலியில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவு காரணமாக முக்கிய சாலைகள் மூடப்பட்டதால், சுற்றுலா பயணிகள் 25 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து நெரிசலில் சிக்கும் நிலை ஏற்பட்டது.
இமாச்சல பிரதேச மாநிலம், குல்லு மாவட்டத்திலுள்ள மணாலியில் கடந்த 48 மணி நேரத்திற்கும் மேலாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது.
இதனால் 600-க்கும் மேற்பட்ட சாலைகள் பனியால் மூடி காணப்படுவதால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
பல முக்கிய சாலைகள் மூடப்பட்ட நிலையில் சுற்றுலா பயணிகள் கடும் குளிரில் 25 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து நெரிசலில் சிக்கினர். சுமார் 15 கிலோ மீட்டர் நீளம் வரை ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால், சில சுற்றுலா பயணிகள் தங்கள் வாகனங்களை விட்டு இறங்கி 10 முதல் 20 கிலோ மீட்டர் வரை நடந்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இத்தகைய சூழலில், மணாலிக்கு சுற்றுலா பயணிகள் பெருமளவில் வந்ததும், ஹோட்டல் அறைகள் முழுமையாக நிரம்பியதும் நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளதாக மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே உள்ளூர் வாசிகளும், சுற்றுலா பயணிகளும் தேவையற்ற பயணங்களை தவிர்த்து, பாதுகாப்பு அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
















