குடியரசு தின விழாவையொட்டி, மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா மற்றும் மத்திய அமைச்சர்கள், தங்களது வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினர்.
டெல்லியில் உள்ள மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, தனது வீட்டில் தேசியக் கொடியினை ஏற்றி வைத்தார். அதிகாரிகள், வீரர்கள் பலரின் முன்னிலையில் தேசியக் கொடியை ஏற்றிய சபாநாயகர் ஓம் பிர்லா, மூவர்ணக் கொடிக்கு வீரவணக்கம் செலுத்தினார்.
தொடர்ந்து, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வீட்டிலும், வீரர்களின் துப்பாக்கி ஏந்திய மரியாதையுடன் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. வீட்டில் தேசியக் கொடியை ஏற்றிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்புப் படை வீரர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் செளகான், தனது வீட்டில் தேசியக் கொடி ஏற்றினார். பின்னர், அங்கிருந்த வீரர்களுக்கு கைகுலுக்கி, குடியரசு தின வாழ்த்துகளை தெரிவித்தார்.
மேலும், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வீட்டிலும் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. தனது இல்லத்தில் தேசியக் கொடியை ஏற்றிய மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், தேசியக் கொடிக்கு உரிய மரியாதை செலுத்தினார்.
















