குடியரசு தினத்தையொட்டி டெல்லி கடமை பாதையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தேசியக்கொடியை ஏற்றி வைத்து, ராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
நாட்டின் 77வது குடியரசு தினவிழாவையொட்டி குடியரசு தலைவர் மாளிகையில் இருந்து திரௌபதி முர்மு பாரம்பரிய முறைப்படி சாரட் வண்டியில் அழைத்து வரப்பட்டார்.
டெல்லியில் உள்ள கடமை பாதைக்கு வருகை தந்த திரௌபதி முர்முவை குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி ஆகியோர் வரவேற்றனர். பின்னர், மேடை அருகே உள்ள கொடிமரத்தில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மூவண்ண கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது, வானில் இருந்து விமானப்படையின் ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டன. இந்த விழாவில், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் ஆன்டோனியோ கோஸ்டா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து, நாட்டின் உயரிய வீரதீர விருதுகளில் ஒன்றான அசோக சக்ரா விருதை விண்வெளி நாயகன் சுபான்ஷூ சுக்லாவுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வழங்கி கவுரவித்தார்.

இதனை அடுத்து, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கலைஞர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. பின்னர், ராணுவம், கடற்படை, விமானப் படை, சிஆர்பிஎஃப் படை வீரர்கள், என்சிசி, என்எஸ்எஸ் படைகள் அணிவகுத்து சென்றன. அப்போது, ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றி கொடியை ஏந்தி விமானப்படையின் ஹெலிகாப்டர் வானில் பறந்து வந்து பரவசத்தை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து, ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கையின்போது பாதுகாப்பு படையினர் பயன்படுத்திய பிரதான ஆயுத அமைப்பின் மாதிரி வடிவங்கள் அணிவகுத்து சென்றன. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துருவகை ஹெலிகாப்டர்கள், இந்தியாவின் நவீன பாதுகாப்பு தளவாடங்களின் மாதிரிகளை கண்டு பார்வையாளர்கள் பரவசமடைந்தனர். மேலும், சக்தி வாய்ந்த பிரமோஸ், ஆகாஷ் ஏவுகணைகள், ஆளில்லா விமானங்கள், ட்ரோன்களின் அணிவகுப்பு மற்றும் DRDO சார்பில் ஏவுகணை தடுப்பு வாகனத்தின் மாதிரிகளும் அணிவகுத்து சென்றன.

இதனை அடுத்து, பாதுகாப்பு படை வீரர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் மிடுக்குடன் அணிவகுத்து சென்றனர்.
இந்தோ-திபெத் எல்லை படை வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு படைப்பிரிவினரின் அணிவகுப்பு நடைபெற்றது. ஒட்டகங்கள், நாய்கள், கழுகுகள் கொண்ட விலங்குகளின் அணிவகுப்பை கண்டு பார்வையாளர்கள் வியப்படைந்தனர். குடியரசு தினவிழாவில் முதன்முறையாக தமிழ்நாட்டின் நாட்டு நாய்கள் கலந்து கொண்டன.
இதனை தொடர்ந்து, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட 17 மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் அணிவகுத்து சென்றன. இதில், ஜல்லிக்கட்டு காளையுடன், தற்சார்பு வளர்ச்சியில் தமிழ்நாடு என்ற கருப்பொருளில் அலங்கார ஊர்தி அணிவகுத்து சென்றது.

பின்னர், வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 500 கலைஞர்கள் கலந்து கொண்டு ஒரே நேரத்தில் வந்தே மாதரம் பாடலுக்கு ஏற்ப நடனமாடினர்.
இதனை தொடர்ந்து, சிஆர்பிஎப் மற்றும் எஸ்எஸ்பி படை பிரிவினர் இருசக்கர வாகனங்களில் அணிவகுத்து சென்று பல்வேறு சாகசங்களை நிகழ்த்தி காட்டினர். இருசக்கர வாகனங்களில் வீரர்கள் யோகாசனம் செய்து அசத்தினர்.
நிறைவாக, தேசிய கீதம் இசைக்கப்பட்டு, மூண்ண கொடியின் பிரதிபலிப்பை கொண்ட பலூன்கள் பறக்கவிடப்பட்டு நாட்டின் 77வது குடியரசு தினவிழா கொண்டாட்டம் நிறைவு பெற்றது.
பின்னர், குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை பிரதமர் மோடி வழியனுப்பி வைத்தார். மீண்டும் சாரட் வண்டியில் குடியரசு தலைவர் புறப்பட்டு சென்றார்.
















