பெரம்பலூர் அருகே ரவுடியை கொல்ல முயன்ற சம்பவத்தில் தொடர்புடைய நபர் போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
பெரம்பலூர் அருகே வெள்ளைகாளி என்ற ரவுடியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு சென்னைக்கு அழைத்து சென்றபோது அவர் மீது மர்மநபர்கள் நாட்டு வெடிகுண்டுகளை வீசி கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக 5 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில், சம்பவத்தில் தொடர்புடைய அழகுராஜா என்பவர் திருமாந்துறை அருகே உள்ள வனப்பகுதியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனடிப்படையில், அங்கு சென்ற போலீசார், அழகுராஜாவை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, அவர் காவலரை தாக்கிவிட்டு மறைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை வீசி தப்பியோட முயன்றுள்ளார்.
இதனை தொடர்ந்து, ரவுடி அழகுராஜா மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ரவுடி தாக்கியதில் படுகாயமடைந்த காவலர் சங்கர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
















