சிவகங்கையில் கிராபைட் ஆலை விரிவாக்க பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, 5 கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் ஊர்வலமாக சென்று மாவட்ட ஆட்சியரகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகங்கையை அடுத்த கோமாளிபட்டியில் கடந்த 1994-ம் ஆண்டு முதல் கிராபைட் கனிமம் வெட்டி எடுக்கப்படுவதுடன், அதன் சுத்திகரிப்பு ஆலையும் இயங்கி வருகிறது.
உலகத்தரம் வாய்ந்த இந்த கிராபைட் கனிமங்கள் கோமாளிபட்டியை சுற்றியுள்ள மேலும் பல கிராமங்களிலும் இருப்பதாக கூறப்படுகிறது.
2-ம் கட்டமாக அப்பகுதிகளில் உள்ள சுமார் 1650 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் தொடங்கப்படவுள்ளன. இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என கூறி, 5 கிராமங்களை சேர்ந்த மக்கள் கருப்பு கொடிகளை ஏந்தியபடி சிவகங்கை மாவட்ட ஆட்சியரகத்தை முற்றுகையிட்டு போராட ஊர்வலமாக சென்றனர்.
அப்போது நிலம் கையகப்படுத்துவதை கைவிடுமாறு அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
















